Developed by - Tamilosai
இலங்கை முகாமையாளர் பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மிகவும் தீவிரமாக தேடப்படும் குற்றவாளி திங்கட்கிழமை கைது செய்யப்பட்டதாக பஞ்சாப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சந்தேக நபர் பில்லி எனப்படும் இம்தியாஸ் என அடையாளம் காணப்பட்டதுடன், அவர் மறைந்த பிரியந்த குமாரவை சித்திரவதை செய்து அவரது உடலை அவமானப்படுத்தியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராவல்பிண்டிக்கு செல்லும் பேருந்தில் வைத்து குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார் என்று பஞ்சாப் பொலிஸார் ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, கடந்த 12 மணி நேரத்தில், பஞ்சாப் பொலிசார் மேலும் ஏழு முக்கிய நபர்களை கைது செய்துள்ளனர்.
இதில் இலங்கை மேலாளர் ஒருவரை படுகொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மற்றும் வன்முறை மற்றும் தூண்டுதலின் குற்றவாளிகளில் ஒருவர் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த வாரம் பாகிஸ்தானின் சியால்கோட்டில் கும்பல் ஒன்றினால் மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் பூதவுடல் நேற்று மாலை கொழும்புக்கு கொண்டுவரப்பட்டது.
லாகூர் அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரியந்தவின் சடலம் நேற்று மாலை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.
நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் அடங்கிய கும்பல், தொழிற்சாலையின் மேலாளராக இருந்த பிரியந்த குமாரவை கடந்த வெள்ளிக்கிழமை சித்திரவதை செய்து கொலை செய்ததுடன், பின்னர் அவரது உடலை எரித்தனர்.
எதிர்ப்பாளர்கள் பிரியந்தவை அறைந்து, உதைத்து, குத்தியதாகவும், தடியடியால் தாக்கியதாகவும், வசிராபாத் சாலையில் உள்ள தொழிற்சாலைக்கு வெளியே இழுத்துச் சென்றதாகவும், அங்கு அவர் இறந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியைகள் நாளைய தினம் அரச அனுசரணையுடன் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள பிரியந்தவின் உடல், கனேமுல்ல பகுதியிலுள்ள அவரது வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து, நாளை இறுதிக் கிரியைகளை நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.