தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பிரபலமாக மாற வேண்டுமா?

0 195

இன்ஸ்டாகிராமை சரியான முறையில் பயன்படுத்தினால் அதிக எண்ணிக்கையில் ஃபாலோயர்களை பெறலாம்.

எல்லோருக்குமே ஒரே இன்ஸ்டா போஸ்ட் மூலம் பிரபலமாக வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

அதற்கான சில வழிகள்

உங்களுக்கான தீம்

நீங்கள் எடுக்கும் படங்களை எல்லாம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்வதில் அர்த்தமில்லை. ஏதோ ஒருவிதத்தில் பார்த்தவுடன் ஈர்க்கக் கூடிய படங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அதோடு, உங்கள் படங்களுக்கு என்று பொதுவாக ஒரு தீம் இருக்க வேண்டும். அப்போது தான் பார்வையாளர்களுக்கு உங்கள் பக்கத்தில் என்னவிதமான படங்களை எதிர்பார்க்கலாம் என்ற புரிதல் இருக்கும்.

சுவாரஸ்யம் அளிக்கக் கூடிய வண்ணமயமான படங்களை பகிர்ந்து கொள்வது பலரை கவரும்.  

ஃபில்டர் வசதி

இன்ஸ்டாகிராம் செயலியில் பலவிதமான ஃபில்டர் (Filter) வசதிகள் உள்ளன. புகைப்படங்களை பகிரும் போது, ஃபில்டர்களை பயன்படுத்துவது சுவாரஸ்யமானதாகவும் தோன்றலாம்.

ஆனால் புகைப்படங்களின் அடிப்படை அழகு தான் முக்கியம். எனவே ஃபில்டர்களை அளவோடு பயன்படுத்த வேண்டும்.  

உங்கள் பயோ

உங்கள் பக்கத்திற்காக என்று பொருத்தமான பயனர் பெயரை தேர்வு செய்யவும்.

அதோடு உங்களுக்கான பயோ பக்கத்தில் சரியான அறிமுகக் குறிப்புகளை இடம்பெறச்செய்யவும். உங்களைப்பற்றிய தகவல்களோடு, புகைப்படக் கலை தொடர்பான உங்கள் ஆர்வம் பற்றிய குறிப்பும் இருப்பது நல்லது.

இந்த பக்கத்தில் இருந்து உங்கள் வலைப்பதிவு அல்லது இணையதளத்திற்கும் இணைப்பு கொடுக்கலாம்.  

பாலபாடம்

நேர்த்தியான படங்களை எடுக்க பயிற்சி தேவை. அதோடு புகைப்படக் கலை தொடர்பான அடிப்படைகளையும் அறிந்திருப்பது அவசியம். டி.எஸ்.எல்.ஆர் காமிரா அல்லது ஸ்மார்ட்போனில் படம் எடுப்பது சுலபம் என்றாலும், கிளிக் செய்வதெல்லாம் நல்ல படங்களாகிவிடாது.

போதிய வெளிச்சம் இருப்பது, பிரேம் எப்படி அமைந்துள்ளது, பின்னணி விவரங்கள் உள்ளிட்ட அடிப்படை அம்சங்களை மனதில் கொண்டு படம் எடுக்க வேண்டும்.

நல்ல படங்களுக்கு இலக்கணமாக சொல்லப்படும், ரூல் ஆப் தேர்ட்ஸ் போன்ற விதிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஸ்மார்ட்போனில் படம் எடுப்பதற்கான வழிகாட்டுத்தல் கட்டுரைகளை இணையத்தில் தேடி வாசித்துப்பார்ப்பதும் கைகொடுக்கும்.

புகைப்பட குறிப்புகள்

புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் போது, அந்த படம் தொடர்பான சுருக்கமான குறிப்புகளை இடம்பெறச்செய்வதும் அவசியம்.

புகைப்படம் எடுக்கப்பட்ட இடம், அதன் பின்னணி உள்ளிட்ட தகவல்கள் பார்வையாளர்கள் படத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள உதவும்.

படம் தொடர்பான அனுபவத்தை எழுதலாம். கருத்துக்களை பதிவு செய்து முடிவில் கேள்வியும் எழுப்பலாம். ஆனால் எந்த குறிப்பும் இல்லாமல் வெறும் புகைப்படத்தை மட்டும் பகிர்வதால் பலனில்லை.   

ஹாஷ்டேக்

புகைப்படத்திற்கான குறிப்பு போலவே, ஹாஷ்டேக் அடையாளமும் முக்கியம். புகைப்படத்தின் கருப்பொருள் சார்ந்து பொருத்தமான ஹாஷ்டேகை, படக்குறிப்புடன் இணைக்க வேண்டும்.

கண்ணில் படும் ஹாஷ்டேகை எல்லாம் இணைக்காமல் சரியான ஹாஷ்டேகை தேர்வு செய்ய வேண்டும்.

பிரபலமான ஹாஷ்டேக் பட்டியலையும் வழிகாட்டியாக கொள்ளலாம். ஆனால் ஹாஷ்டேக் பயன்பாட்டில் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத ஹாஷ்டேகை வரிசையாக இணைப்பது எதிர்பார்த்த பலனை அளிக்க வாய்ப்பில்லை.  

உரையாடங்கள்

உங்கள் ஃபாலோயர்களை எண்ணிக்கையாக மட்டும் கருத வேண்டாம். அவர்களை இணைய நண்பர்களாக கருதி உரையாடுங்கள்.

குறிப்பிட்ட படத்தால் கவரப்பட்டும், அவர்கள் கருத்து தெரிவித்திருந்தால் அதற்கு பதில் அளியுங்கள். கருத்து பரிமாற்றத்தை உரையாடலாக மாற்றும் போது ஃபாலோயர்கள் உங்கள் அபிமானிகளாக மாறி, தங்கள் நட்பு வட்டத்தில் உங்களை அறிமுகம் செய்யலாம்.

அதே போல நீங்கள் யாரை எல்லாம் பின் தொடர்கிறீர்கள் என்பதும் முக்கியம். மனம் போன வகையில் மற்றவர்கள் பக்கங்களை பின் தொடராமல், உண்மையிலேயே உங்களுக்கு ஆர்வம் அளிக்கக் கூடியவர்கள் பக்கங்கள் பின் தொடருங்கள்.

அந்த பக்கங்களில் பகிரப்படும் படங்கள் குறித்து வெளிப்படையான முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். இதன் மூலமும் உரையாடலை வளர்க்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.