Developed by - Tamilosai
பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள வனாதவில்லுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய வனாதவில்லுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகச் செயற்பட்ட தலைமை பொலிஸ் பரிசோதகர் நளிந்த உபுல் பத்திரண அண்மையில் கைது செய்யப்பட்டார்.
குறித்த முறைப்பாடு இன்று கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் அழைக்கப்பட்ட போது சந்தேகநபர் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
இதன்படி, சந்தேகநபரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
தனது கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வரும் பெண் ஒருவரின் காணிப் பிரச்சினைக்கு அவருக்கு ஆதரவாகச் செயற்பட்டு தீர்த்து வைப்பதற்காக ஒரு இலட்சம் ரூபாய் பணமும் மற்றும் பாலியல் இலஞ்சம் கோரியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.