தமிழ் ஓசை
தமிழ் ஓசை

“பாரதூரமான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும்”

0 198

நாட்டில் தற்போது நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை பயன்படுத்தக் கூடியளவில் மாத்திரமே மசகு எண்ணெய் காணப்படுகிறது.

ஆனால் டிசெம்பர் 14 ஆம் திகதியே மசகு எண்ணெய் கப்பல் நாட்டை வந்தடையும். இதன் காரணமாக தற்போது மிகக் குறைந்தளவிலேயே எண்ணெய் சுத்திகரிப்பு செயற்பாடுகள் இடம்பெறுவதாக எரிபொருள் தேசிய சங்கத்தின் பிரதி இணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:

நாட்டில் பாரதூரமான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும். எனவே, இது தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தினோம்.

எனினும், தொழிற்சங்கங்கள் பொய் கூறுவதாகவும், நாட்டில் போதுமானளவு எரிபொருள் காணப்படுவதாகவும், எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுமானால் அதனை நான் மறைக்கப் போவதில்லை என்றும் அமைச்சர்  உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை மாத்திரமே மசகு எண்ணெய் காணப்படுகிறது என்பதை ஏற்கனவே தொழிற்சங்கங்கள் ஊடகவியலாளர் மாநாடுகளில் தெரிவித்துள்ளன.

ஆனால், டிசெம்பர் 14 ஆம் திகதியே கப்பல் வரவுள்ளது. மசகு எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக மிகவும் குறைந்த அளவிலேயே சுத்திகரிப்பு முன்னெடுக்கப்படுகிறது.

அரசாங்கத்திற்கு நெருக்கமான தொழிற்சங்கங்களும் எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளருமே இதனைக் கூறினர்.

எனினும், கப்பலொன்று நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக எரிபொருள் கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார். ஆனால், வருகை தந்தது என்ன கப்பல் என்பதை அவர் குறிப்பிடவில்லை. அது பெற்றோல் கப்பலாகும். மசகு எண்ணெய் கப்பல் அல்ல.

மக்கள் கலவரமடைந்து எரிபொருள் நிரப்பச் சென்றமையே எரிபொருள் தட்டுப்பாட்டுக்குக் காரணம் என்று அமைச்சர் கூறுகின்றார்.

எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் நிலைவரத்தை செய்திகள் ஊடாகத் தெரிந்து கொள்ளுமாறு அமைச்சருக்கு அறிவிக்கின்றோம்.

 தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினைத் தவிர்க்க முடியாத நிலைமையே நாட்டில் காணப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.