தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பாடசாலை நிறைவடைந்த நிலையில் போராட்டத்தில் குதித்த அதிபர் – ஆசிரியர்கள்

0 79

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கல்விச் செயற்பாடுகள் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகின.

 இந்நிலையில்   பாடசாலைக்குச் சென்று கற்றல் நடவடிக்கைகளை முடித்ததன் பின்னர் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு கோரி இன்றையதினம் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

சுபோதினி குழு அறிக்கைக்கு அமைய சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குமாறு கோரி ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கத்தினர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதேவேளை, நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு அருகாமையில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும், 24 வருட காலமாக நிலவிவரும் அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வினைப் பெற்றுத்தருமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டது.  

அதன்படி, இலங்கையின் ஆசிரியர் சமூகம் முன்வைக்கும் கோரிக்கைகள் மற்றும் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தின் கௌரவத்தையும், முன்னேற்றத்தையும் பாதுகாக்க இந்த நாட்டின் அதிகாரிகளை உன்னிப்பாகக் கவனிக்குமாறு நாங்கள் கடுமையாக வலியுறுத்துகிறோம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

1997மற்றும் 2006ஆகிய வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட சம்பளத்திட்டத்தை அமுல்படுத்தப்படாமையை கண்டித்தும் அதிபர், ஆசிரியர் சட்டத்திட்டங்களுக்குப் புறம்பாக புதிய ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டமை, உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படாமை, கொரோனா குறித்து முழுமையான வசதிகள் பாடசாலைகளுக்கு செய்துகொடுக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தியும் எதிர்ப்பு வசனங்கள் எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

அத்தோடு, மட்டக்களப்பில் அதிபர்கள் – ஆசிரியர்கள் ஒன்றிணைந்து காந்தி பூங்காவிலிருந்து பேரணியாக மணிக்கூட்டுக்கோபுரம் வரை சென்று மீண்டும் காந்தி பூங்கா முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

 தங்களது கோரிக்கையான சம்பள முரண்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டுமென்றும், கல்வியில் இராணுவ மயமாக்கலை நிறுத்தக் கோரியும் பாராளுமன்றத்தில் சம்பளம் தொடர்பாக ஒரு தீர்மானத்தை எடுக்கக் கோரியும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

 இன்று தங்களது கல்வி நடவடிக்கைக்குச்  சென்று சரியாக இரண்டு மணியளவில் கல்வி நடவடிக்கைகள் நிறைவு பெற்றதும் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.

 குறித்த ஆர்ப்பாட்டத்தில் பல சங்கங்கள் ஒன்றிணைந்து  தங்களது உரிமை வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.