தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பல்லினங்களையுடைய நாட்டில் ஒரே சட்டம் ஏற்புடையதல்ல – சபா குகதாஸ்

0 105

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஞானசார தேரர் தலைமையில் அமைத்துள்ள ஒரே நாடு ஒரே சட்டம் என்ற விடயத்தை முன்னெடுக்கும் செயலணி பல்லினங்கள் வாழும் இந்த இலங்கைத் தீவில் ஏற்புடையதல்ல.

இதனை நிறுத்திக் கொள்வதே இன நல்லிணக்கத்திற்கும் நிலையான அமைதிக்கும் வழி ஏற்படுத்தும் என          முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.


பல இனங்கள் வாழும் ஒரே நாட்டில் பல் வகைமை கொண்ட கலாசார மத பண்பாட்டு விழுமியங்கள் காணப்படுவதால் பெரும்பான்மை இனத்தை மையமாகக் கொண்ட ஒரே சட்டம் என்ற கோசம் ஏனைய இனங்களின் அடிப்படை உரிமைகளை புறம் தள்ளுவதுடன் அவர்களது அரசியல் அபிலாஷைகளைக் குழி தோண்டிப் புதைப்பதாக அமையும்.

இதனால் ஒரே நாட்டிற்குள் தொடர்ந்தும் அமைதியற்ற சூழல் உருவாகும். அத்துடன் சர்வதேச நாடுகளின் மேலாதிக்க அழுத்தங்கள் சர்வதேச நியமங்களை அடிப்படையாக கொண்டு வலுப் பெறும் இதனை சிங்கள தேசம் இனியும் எதிர் கொள்ளத் தயாரா? என்ற கேள்விக்கான விடையை நிதானமாக சிந்திக்க வேண்டும்.

உலக நாடுகளின் ஒழுங்கு முறைகளை ஆராய்ந்தால் பல் வகை இனங்கள் வாழும் நாடுகளில் எல்லாம் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் ஒவ்வொரு இனங்களின் தனித்துவங்களையும் பாதுகாக்கும் வகையிலான அரசியமைப்புக்களை உருவாக்கி இனங்களின் சுயமரியாதையை பேணும் வகையில் முன்னோக்கி நகர்கின்றன.

 இந்த நவீன உலகில் மிகவும் பிற்போக்குத்தனமாக ஒரே நாடு ஒரே சட்டம் என்ற மனோநிலையில் சிங்கள ஆட்சியாளர்கள் இருப்பது மிக வேதனையாக உள்ளது.

இந்தச் செயலணியை  நிறுத்தி அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை ஒவ்வொரு இனங்களுக்கும் வழங்குவதே ஒரே நாட்டிற்குள் சகல இனங்களும் நல்லிணக்கத்துடன் நிரந்தர சமாதானத்துடன் வாழ முடியும் இதுவே இலங்கைத் தீவின் நிலையான அபிவிருத்திக்கும் நிரந்தரத் தீர்வாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.