தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பயங்கரவாத தடைச் சட்டம் குறித்து ஐ.நா. விசேட அறிக்கையாளர்கள் எழுவர் ஜனாதிபதிக்கு கடிதம்

0 150

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக மீளாய்விற்குட்படுத்தி, அதன் பாதகமான சரத்துக்களைத் திருத்தியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் பொறிமுறையின் கீழ் மனித உரிமைகளுக்கு உரியவாறு மதிப்பளிக்கப்படுவதுடன் அவை பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் 7 விசேட அறிக்கையாளர்கள் கூட்டாக இணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.

 அதுமாத்திரமன்றி அவசியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் வரையில், பயங்கரவாத்தடைச்சட்டத்தின் பயன்பாட்டை இடைநிறுத்துமாறும் அக்கடிதத்தின் ஊடாக ஐ.நா விசேட அறிக்கையாளர்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

 பயங்கரவாத தடை சட்டம் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்திற்கு அமைவாக மீளாய்விற்கு உட்படுத்தப்பட்டுத் திருத்தியமைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தி பயங்கரவாதத்தை ஒழிக்கும் அதேவேளை மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் பியோனுவாலா நி ஓலெய்ன், வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐ.நா செயற்குழுவின் தலைமை அறிக்கையாளர் லூசியானோ ஹஸன், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் ஐரின் கான், அமைதியாக ஒன்றுகூடுதல் மற்றும் கலந்துரையாடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் கிளெமென்ற் நியாலெற்சொஸி வோல், சிறுபான்மையினர் விவகாரங்கள் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் பெர்னான்ட் டி வரேனெஸ், மத நம்பிக்கைசார் சுதந்திரம் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் அஹ்மட் ஷஹீட் மற்றும் சித்திரவதைகள் மற்றும் ஏனைய மனிதாபிமானமற்ற நடத்தைகள் அல்லது தண்டனைகள் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் நில்ஸ் மெல்ஸெர் ஆகிய எழுவர் இணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

 பயங்கரவாதத்தடைச்சட்டத்தை ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைப்பதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் உங்களுடைய அரசாங்கத்தினால் வழங்கப்படும் தெளிவுபடுத்தலை வரவேற்கின்றோம். அதேவேளை மிகுந்த கரிசனைகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் இப்பயங்கரவாத்தடைச்சட்டத்தில் காணப்படும் சரத்துக்கள் தொடர்பில் நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தமையினை நினைவுறுத்துவதுடன் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக அதனை உடனடியாக மீளாய்வு செய்யவேண்டியதன் அவசியத்தை உங்களது அரசாங்கத்திற்கு மீளவலியுறுத்துகின்றோம். 

கடந்த காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா விசேட அறிக்கையாளர்கள் சிலர் பயங்கரவாத்தடைச்சட்டத்தினால் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்களை சீர்செய்வதற்கான பரிந்துரைகளை உங்களுடைய அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தனர். இருப்பினும் அந்தப் பரிந்துரைகள் செயற்படுத்தப்படாததுடன் மாத்திரமன்றி உரிமைகள் மேலும் மறுக்கப்படக்கூடியவாறான நடைமுறைகள் உள்வாங்கப்பட்டமை கவலையளிக்கின்றது.

 எதுஎவ்வாறிருப்பினும் பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்தம் தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களை வரவேற்கின்றோம். அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் மேற்கொள்வதற்கு எதிர்பார்த்திருக்கும் எந்தவொரு திருத்தமும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கும் உங்களுடைய சர்வதேசக் கடப்பாடுகளுக்கும் ஏற்புடையவகையிலும் அமைவதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம்.

மேலும் சர்வதேச சட்டக்கடப்பாடுகளுக்கு அமைவாகப் பயங்கரவாதத்தடைச்சட்டம் திருத்தியமைக்கப்படவேண்டுமெனில், சர்வதேச நியமங்களுக்கு அமைவாக ‘பயங்கரவாதம்’ என்ற சொல்லுக்கான வரைவிலக்கணத்தை வழங்கல், குறிப்பாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் கருத்துச்சுதந்திரம், கலந்துரையாடல்கள் மற்றும் மதரீதியான நம்பிக்கைகள் போன்றவற்றில் தாக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படும் பட்சத்தில் சட்டப்பிரயோகத்தின் துல்லியம் உறுதிப்படுத்தப்படல், சுதந்திரத்தைத் தன்னிச்சையாக மட்டுப்படுத்தும் வகையிலான சரத்துக்கள் திருத்தப்படல், சித்திரவதைகள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கான பாதுகாப்புசார் சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தல், நீதிமன்ற மேற்பார்வை மற்றும் சட்ட உதவியை நாடுவதற்கான வாய்ப்பு உள்ளடங்கலாக நியாயமான விசாரணைப் பொறிமுறை பின்பற்றப்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துதல் என்பன பூர்த்திசெய்யப்படவேண்டும்.

 பயங்கரவாதத்தடைச்சட்டம் அர்த்தமுள்ள வகையில் திருத்தியமைக்கப்படவேண்டியதன் அவசியத்தை நாம் மீளவலியுறுத்த விரும்புகின்றோம். இச்சட்டத்தின்கீழ் தன்னிச்சையாகத் தடுத்துவைக்கப்படக்கூடியவர்களின், குறிப்பாக இன மற்றும் மதரீதியான சிறுபான்மையினரின் (பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்படக்கூடிய) உரிமைகள் மற்றும் சுதந்திரம் தொடர்பான அச்சுறுத்தலும் உரியவாறான நடைமுறைகள் பின்பற்றப்படும் என்பதற்கான உத்தரவாதமின்மையும் இதுபற்றிய கரிசனைகள் தொடர்வதற்குக் காரணமாக அமைந்துள்ளன. நீதிமன்றத்தின் உரியவாறான மேற்பார்வையின்மை மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களுக்கு அமைவான நடைமுறைகள் பின்பற்றப்படாமை என்பன அச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்பேற்படுத்தக்கூடும்.

 ஆகவே உடனடியாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முழுமையாக மீளாய்விற்குட்படுத்தி, கரிசனைக்குரிய அனைத்து சரத்துக்களையும் திருத்தியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் பொறிமுறையின்கீழ் மனித உரிமைகளுக்கு உரியவாறு மதிப்பளிக்கப்படுவதுடன் அவை பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறும் அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம். அதுமாத்திரமன்றி மேற்கூறப்பட்டவாறு அவசியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் வரையில், பயங்கரவாத்தடைச்சட்டத்தின் பயன்பாட்டை இடைநிறுத்துமாறும் கோருகின்றோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Leave A Reply

Your email address will not be published.