தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பன்டோரா பேப்பர்ஸில் வெளியான மோசடி குறித்து ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்க வேண்டும் – தயாசிறி

0 238

பன்டோரா பத்திரிகையில் தெரிவிக்கப்படும் ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளவேண்டும். அதன் மூலமே உண்மை நிலைமையை கண்டுகொள்ளலாம்.

அத்துடன் கோப்குழுவின் அறிக்கைகளில் தெரிவிக்கப்படும் மோசடி காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கோப் குழு தலைவருக்கு வழங்கவேண்டும் என ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

நாட்டில் பாரிய திருடர்கள் அரசியல்வாதிகள் என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். ஆனால் பாராளுமன்ற தெரிவுக்குழு மற்றும் கோப்குழு அறிக்கைகளை பார்த்தால் நிறுவனங்களின் அதிகாரிகளின் மோசடிகள் தொடர்பாக அறிந்துகொள்ளலாம். 

விசேடமாக மின் உற்பத்திக்கான நிலக்கரி உற்பத்தி நடவடிக்கைக்காக பாரிய மோசடி இடம்பெற்றிருப்பது தெரியவந்திருக்கின்றது. இவ்வாறு பல நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பாக கோப்குழுவில் நாங்கள் கதைத்து மோசடிகளை வெளிப்படுத்துகின்றோம்.

ஆனால் மோசடி காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கோப்குழு தலைவருக்கு இல்லை. மோசடி காரர்கள் சுதந்திரமாக செயற்படுகின்றனர். அதனால் கோப்குழு தலைவருக்கு மோசடி காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் வழங்கப்படவேண்டும். அதன் மூலமே இதற்கு முடிவு காணமுடியும்.

அதேபோன்று மத்திய அதிவேக பாதை வேலைத்திட்டத்தை மத்திய அதிவேக பாதையாக மாற்றியதால் பல கோடி ரூபா நட்டமடைந்திருக்கின்றது. அரசாங்கம் மாறும்போது வேலைத்திட்டங்களை மாற்றுவதனாலே இந்த நட்டம் ஏற்படுவதற்கு காரணமாகும். அதனால் எதிர்காலத்தில் யார் அரசாங்கம் செய்தாலும் வேலைத்திட்டங்களில் மாற்றம் செய்யாமல் இருப்பதற்கு முடியுமான கொள்கை அமைக்கப்படவேண்டும். 

அத்துடன் நிறுவனங்களில் பிரதானிகள் கடந்த காலங்களில் மேற்கொண்ட மோசடிகளுக்கு எதிராக எந்த விசாரணையும் இல்லை. அதனால் அந்த அதிகாரிகள் மீண்டும் நிறுவனங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் தொடர்ந்தும் அதே மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.

இதனை நிறுத்துவதாக இருந்தால் நிறுவன பிரதானிகளை நியமிக்கும்போது அவர்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை பெற்றுக்கொண்டு பரிசீலனை செய்து பார்க்கவேண்டும்.

மேலும் பெண்டோரா பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் ஊழல் மோசடிகள் தொடர்பாக பலரும் கதைக்கின்றனர். இதில் தெரிவிக்கப்படும் ஊழல் மோசடி தொடர்பாக பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து தேவையான விசாரணை மேற்கொள்ளவேண்டும். அதன் மூலம் பல விடயங்களை அறிந்துகொள்ளலாம். அதனால் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எனவே நாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடிதொடர்பாக ஆராய்ந்து விசாரணை மேற்கொள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து விசாரணை மேற்கொண்டால், அந்த குழுவுக்கு திருநடேசன், நிருபமா ராஜபக்ஷ் ஆகியோரையும் அழைத்து விசாரிக்கலாம். அதேபோன்று  ஏனையவர்களுக்கும் அங்கு வந்து இதுதொடர்பான விடயங்களை தெரிவிக்கலாம் என்றார். 

Leave A Reply

Your email address will not be published.