Developed by - Tamilosai
அபே ஜனபல வேகய கட்சியிலிருந்து நீக்கினாலும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் அபே ஜனபல வேகய கட்சிக்கு கிடைக்கப் பெற்ற தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லவில்லை.
இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தயாராகவுள்ளோன். ஒருபோதும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் அபே ஜனபல வேகய கட்சி எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் விஜயதரணி என்ற கட்சியின் ஊடாக அபேஜன பல வேகய கட்சியின் கூட்டணியில் இணைந்து கொண்டேன்.
பொதுத்தேர்தலில் கிடைக்கப் பெற்ற 67 ஆயிரம் வாக்கிற்கு ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைக்கப் பெற்றது. அப்போதைய சூழ்நிலையில் பாராளுமன்றம் செல்வதற்குக் கூட்டணியில் போட்டியிட்ட எவருக்கும் தகுதி இருக்கவில்லை.
விஜயதரணி கட்சி ஊடாக கூட்டணியமைத்த எனக்கு பாராளுமன்றம் செல்வதற்கான தகுதி இருந்தது. இதற்கமையவே பாராளுமன்றம் சென்றேன்.
கூட்டணியில் ஒன்றிணையும் போது அபேஜனபல வேகய கட்சியின் உறுப்பினராகவில்லை.
ஆகவே எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுக்கவும், கட்சியிலிருந்து நீக்கவும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பிறிதொரு தரப்பினருக்கு வழங்கவும் அக்கட்சிக்கு அதிகாரம் கிடையாது என அவர் மேலும் தெரிவித்தார்.