தமிழ் ஓசை
தமிழ் ஓசை

“பண்டிகைக் காலங்களில் ஒன்று கூடுவதை மக்கள் முற்றாகத் தவிர்க்க வேண்டும்”

0 50

கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை குறைவடைந்து வருகிறது என்பதற்காக பி.சி.ஆர். பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என பிரதிச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனவே தற்போது கொவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மாத்திரமின்றி வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்கள் சகலருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் புதன்கிழமை  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

மாணவர்களுக்கான அடுத்த கட்ட தடுப்பூசி வழங்கல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது.

மருத்துவ ஆலோசனை குழுவின் பரிந்துரைக்கமையவே அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும். தற்போது கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என்பதற்காக கொவிட் அபாயமும் குறைவடைந்து விட்டதாகக் கருத முடியாது.

கடந்த ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் இதே போன்ற நிலைமையே காணப்பட்டது. எனினும் பாதுகாப்பற்ற நடமாட்டம் மற்றும் மக்கள் ஒன்று கூடல் உள்ளிட்ட காரணிகளால் வைரஸ் பரவல் தீவிரமடைந்தது. அத்தோடு டெல்டா பிறழ்வும் தீவிரமாகப் பரவியது.

இதே போன்றதொரு நிலைமை மீண்டுமொருமுறை ஏற்படாது என்று கூற முடியாது. எனவே பண்டிகைக் காலங்களில் மக்கள் ஒன்று கூடுவதை முற்றாக தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். குறிப்பாக பொது போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

தொற்றாளர் எண்ணிக்கை குறைவடைந்து வருகிறது என்பதற்காக பி.சி.ஆர். பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என  அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.