தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பட்ஜெட் விவாதத்தை சைகை மொழியில் வழங்க அனுமதி

0 190

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தை செவிப்புலனற்ற நபர்களுக்காக சைகை மொழியிலும் வழங்குவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

சபாநாயகரின் ஆலோசனைக்கு அமைய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இவ்விடயத்தைக் கவனத்தில் எடுத்துக் கொண்டதுடன், இதற்கமைய வரவு – செலவுத்திட்ட விவாதம் நடைபெறும் காலப்பகுதியில் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சமாந்தரமாக சைகை மொழிக்குத் தனியானதொரு கட்டமொன்றை வழங்குவதற்கும் இங்கு அனுமதி வழங்கப்பட்டது.

அத்துடன், நவம்பர் 09ஆம் திகதி வியாழக்கிழமை அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு சமர்ப்பித்துள்ள அறிக்கைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

கடந்த ஜூலை 20 ஆம் திகதி, ஒக்டோபர் 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கைகளே இவ்வாறு விவாதத்துக்கு உள்ளாக்கப்படவுள்ளன.


 இந்த சபை ஒத்திவைப்பு விவாதம் முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணிவரை நடைபெறவுள்ளது.

எதிர்வரும் நவம்பர் 08ஆம் திகதி திங்கட்கிழமை விசேட பாராளுமன்ற தினமாக அமையவிருப்பதுடன், அன்றையதினம் முழுவதையும் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய கொவிட் சூழல் காரணமாக பாராளுமன்ற அமர்வுகள் வரையறுக்கப்பட்டமையால் பாராளுமன்றத்தில் கேட்கப்படாத வாய்மூல விடைக்கான 50 கேள்விகளுக்கு அன்றையதினம் முற்பகல் 10 மணி முதல் மாலை 5.30 மணிவரையான காலப்பகுதியை ஒதுக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.