தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பங்களாதேஷுக்கு எதிரான தொடரை வெள்ளையடிப்புச் செய்தது இலங்கை

0 102

இலங்‍கைக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டிருந்த  19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான  5 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் தொடரை 19 வயதுக்குட்ட இலங்கை அணி ஐந்திற்கு பூச்சியம் என்ற கணக்கில் வெள்ளையடிப்பு செய்து சம்பியனானது.

இவ்விரண்டு அணிகளுக்கிடையில் இன்று காலை ஆரம்பமான 5 ஆவதும் கடைசியுமான போட்டியில் பங்களாதேஷ் இளம் அணியினருக்கு வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புக்கள் இருந்தபோதிலும், போட்டியின் கடைசி ஓவர்களில் இலங்கை வீரர்கள் சிறப்பாக செயற்பட்டு போட்டியை  தமது பக்கமாகத் திருப்பிக்கொண்டு 4 ஓட்டங்களால்  இறுக்கமான வெற்றியை ஈட்டினர்.

துனித் வெல்லாலகே தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியும், மெஹரூப் ஹசன் தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் கிரிக்கெட் அணியும் 5 போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில் பங்கேற்றிருந்தன.  
இந்த 5 போட்டிகளுமே தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான சமிந்து விக்கிரமசிங்கவின் சதத்தின் உதவியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றது. 


துடுப்பாட்டத்தில் சமிந்து விக்கிரமசிங்க 123 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் அடங்கலாக 102 ஓட்டங்களை விளாசினார்.

இவரைத் தவிர ‍ஷெவோன் டேனியல் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்களை அடித்து இத்தொடர் முழுவதும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்தார்.  


இவர்களுக்கு அடுத்தபடியாக அணித்தலைவர் துனித் வெல்லாலகே 20 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் முஷ்பிக் ஹசன் 3 விக்கெட்டுக்களையும், ரிப்பொன் மொண்டல் மற்றும் அஹோசன் அபீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் 50 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 236 ஓட்டங்களை பெற்றது. 


 47 ஓவரில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 223 ஓட்டங்களை பெற்று வெற்றியை நோக்கி துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த பங்களாதேஷ் இளம் அணியினர் கடைசி 18 பந்துகளில் 13 ஓட்டங்களுக்கு க‍டைசி 6 விக்கெட்டுக்களையும் இழந்து பரிதாபமாக தோற்றனர்.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான மாபிஜுல் இஸ்லாம் (62), அயிச் மொல்லாஹ் (55) ஆகியோர் அரைச்சதம் அடித்தனர். இறுதிக்கட்டத்தில் அயிச் மொல்லாஹ் ஆட்டமிழந்தமை பங்களாதேஷ் அணியின் தோல்விக்கு முக்கிய காரணியாக அமைந்து.

இலங்கை சார்பாக பந்துவீச்சில் 49 ஆவது ஓவரில் வினூஜ ரண்புல் மற்றும் துனித் வெல்லாலகே தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இவர்கள் இருவரும் கடைசி 2 ஓவர்களை வீசி 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தமை விசேட அம்சமாகும்.

இவர்களைத் தவிர சசங்க நிர்மல், வனூஜ சஹன், ஷெவோன் டேனியல், ரவீண் டி சில்வா ஆகியோரும் தம் பங்குக்கு தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி 5 க்கு 0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி சம்பியன் பட்டம் வென்றது.  

Leave A Reply

Your email address will not be published.