Developed by - Tamilosai
கடந்த சில நாள்களாகவே நேபாளத்தில் தலைநகர் காத்மண்டுவின் மேற்கு பகுதியில் உள்ள அச்சாம்,தார்சுலா ஆகிய மாவட்டங்களில் விடாது கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக லஸ்கு மற்றும் மகாகாளி ஆகிய நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வீடுகள் மற்றும் பாலங்கள் அடித்து செல்லப்பட்டன.
அத்துடன் பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த கனமழை வெள்ளம் காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 10க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
பல மாவட்டங்களில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.சம்பவ இடங்களுக்கு பேரிடர் மீட்பு குழுவை அனுப்பிவைத்துள்ள அரசு மீட்பு பணிகளை துரிதமாக நடத்த சில இடங்களில் ஹெலிகாப்டர்களை பயன்படுத்துகின்றன. நேபாளத்தில் பல பகுதிகள் மலைப் பிரதேசம் என்பதால் மண்ணில் புதைந்த வீடுகளில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டெடுக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் வடிந்து மீட்பு பணிகள் முழுமையாக நடைபெற்ற பின்னரே முழுமையான சேத விவரம் வெளிவரும் என்றும் அப்போது உயிரிழப்பு எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கலாம் என அரசு கவலை தெரிவித்துள்ளது.