தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் -சஜித் பிரேமதாச

0 453

” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, தொடர் மின்வெட்டு, பொருட்கள் விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்நிலைமையை உருவாக்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் தலவாக்கலையில் நேற்று (07) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” வங்குரோத்துடைந்த சில அரசியல்வாதிகள், தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக மீண்டும் இனவாதத்தையும், மதவாதத்தையும் கையில் எடுத்துள்ளனர். இனம், மதம், அரசியல் பேதங்களை மறந்துதான் மக்கள் இன்று வீதிக்கு இறங்கியுள்ளனர். எனினும், மக்களின் போராட்டத்துக்கு முத்திரை குத்தப்படுகின்றது. எனவே, இனவாதத்தையும், மதவாதத்தையும் தோற்றுவிப்பவர்களை, தோற்கடிப்பதற்காக நாம் அறவழியில் எழுந்து நிற்போம்.

இது எமது நாடு, நாட்டு வளங்களை, சொத்துகளை காக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. எனவே, தேசிய சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காத வகையிலேயே போராட்டங்கள் இடம்பெற வேண்டும். ஒழுக்கம் உள்ள மக்கள் என்ற வகையில் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் அதனை பின்பற்றுகின்றனர் என உறுதியாக நம்புகின்றேன்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள், சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள். பயிரிடப்படாத நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படும். சிறு தேயிலை தோட்டங்கள் அதிகரிக்கும் பட்சத்தில், ஏற்றுமதி அதிகரிக்கும், ஏற்றுமதி அவ்வாறு அதிகரித்தால் வருமானம் கூடும். அந்த வழிமுறையை நாம் கையாள்வோம். அதேபோல லயன் யுகத்துக்கும் முடிவு கட்டப்படும். மலையக மக்களின் எழுச்சிக்காக தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து காத்திரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற யோசனையை நாம் முன்வைத்துள்ளோம். தனி நபரிடம் அதிகாரம் இருக்ககூடாது. சர்வாதிகார ஆட்சியும் வேண்டாம். எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை இல்லாதொழிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.