தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நிமலராஜன் கொலை; 20 வருடங்களின் பின்னர் சந்தேகநபர் ஒருவர் பிரித்தானிய போர்க்குற்ற விசாரணை பிரிவினால் கைது!

0 313

2000ஆம் ஆண்டு இலங்கை ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

20 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக Metropolitan பொலிஸ் போர்க்குற்ற விசாரணைக் குழு தகவல் கோரியிருந்தது.

இந்த விசாரணைகளின் அடிப்படையில் கடந்த 22ம் திகதி (செவ்வாய்க்கிழமை) நார்தாம்ப்டன்ஷையரில் 48 வயதுடைய ஒருவரைக் கைது செய்துள்ளதாக Metropolitan காவல்துறை இன்று தெரிவித்துள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டம் 2001 இன் பிரிவு 51 இன் கீழ் குற்றங்கள் புரிந்ததாக சந்தேகத்தின் பேரில் குறித்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் விசாரணையின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2000ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலைச் சம்பவம் தொடர்பில் இந்த கைது நடவடிக்கை மேற்ககொள்ளப்பட்டதாக Metropolitan பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் நிமலராஜனின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு சிறப்பு அதிகாரிகள் ஆதரவு வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளுக்கு உதவக் கூடிய தகவல் தெரிந்தவர்கள் முன் வந்து நிமலராஜனின் குடும்பத்திற்கு நீதியை நிலைநாட்ட உதவுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் தகவலை வழங்க, போர் குற்றங்கள் குழுவிற்கு நேரடியாக SO15Mailbox. WarCrimesTeam@met.police.uk என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Met Police War Crimes Unit ஆனது Met Police Terrorism Commandக்குள் உள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இங்கிலாந்தின் அதிகார வரம்பிற்குள் வரக்கூடிய மற்றும் உலகில் எங்கும் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை அல்லது சித்திரவதை செய்ததாக சந்தேகிக்கப்படும் எவரையும் விசாரித்து நீதிக்கு கொண்டு வருவதற்கு இது உறுதிபூண்டுள்ளது.

போர்க் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாக இங்கிலாந்து இருக்காது என்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

எனினும், ஊடகவியலாளர் நிமல்ராஜன் கொலை செய்யப்பட்டு 21 ஆண்டுகளுக்கும் மேலாகும் போதிலும்,  அவரது கொலைக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.

இதேவேளை, நிமல்ராஜனின் குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு அதிகாரிகள் ஆதரவளிப்பதாக பெருநகர பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.