தமிழ் ஓசை
தமிழ் ஓசை

“நினைவேந்தலில் மாற்றம் விடுதலைப் போராட்ட உண்மைகளை திரிபு படுத்திவிடும்”

0 92

தமிழர்களின்  உண்மையான பூர்வீக வரலாறுகளை மறைக்கும் பாரிய நிகழ்ச்சித் திட்டத்தில் சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் செயற்பட்டு வரும் போது தமிழர்கள் தடைகளுக்கு மத்தியில் அந்த வரலாற்று உண்மைகளை உயிர்ப்புடன் அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய தார்மீகக் கடமையைக் கொண்டுள்ளனர் என்பதை ஒவ்வொரு தமிழரும் மறந்து விட முடியாது என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் தாம் வாழும் சம காலத்து வரலாற்று நிகழ்வுகளையே திரிபு படுத்தும் அபத்தமான காரியங்களில் இறங்கி விடக்கூடாது. 

காரணம் வரலாறு என்பது நிகழ்வுகள் நடந்த சம காலத்திலேயே பதிவு செய்யப்பட்டு ஆதாரப்படுத்தப்பட  வேண்டும்.

 அதுவே எதிர்காலத்தில் அதன் உண்மைத் தன்மைகளை உறுதி செய்யும். இவ்வாறான உண்மைகளை தொழில் நுட்ப  முறைகளினில் மாற்றியமைக்க முடியாது.

உதாரணமாக மகாவம்சத்தில் அதன் உண்மைத் தன்மைகளை ஏற்க மறுப்பதற்கான காரணம் அந்த நூலில் இடம் பெற்ற சம்பவங்கள் கி. மு. 6 நூற்றாண்டில் நடந்தவை.

 ஆனால், அதனை எழுதிய நூலாசிரியர் கி. பி. 6 நூற்றாண்டில் வாழ்ந்தவர். இந்த வேறுபாட்டுடன் குறிப்பிட்ட பல விடயங்களுக்கு ஆதாரம் இல்லை. ஆகவே, இவ்வாறான நிலை எதிர்காலத்தில் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாறுக்கும் ஏற்பட்டு விடக் கூடாது.

தமிழர்களின் விடுதலைப் போராட்ட உண்மைகளை சம காலத்திலேயே மாற்றியமைத்தால்  இனத்தின் வரலாற்று இருப்புக்கு பாரிய பின்னடைவாக அமைவது மாத்திரமல்ல விடுதலைப் போராட்ட உண்மைகள் மறைக்கப்பட்டு விடும்.

சிங்கள் ஆட்சியாளர்கள் தடுக்கின்றார்கள், நினைவேந்தல்களை செய்யும் போது பயங்கரவாதத் தடைச் சட்டம் பாயும் என்பதற்காக வரலாற்று உண்மைகளை மாற்றி நினைவேந்தல் செய்வது ஆரோக்கியமான பணி அல்ல.

1948  ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தொடரும் அடக்குமுறைகள், அழிவுகள், தியாகச் செயற்பாடுகள் யாவும் திரிபு படுத்தப்படாமல் தடைகளுக்கு மத்தியில் அனுஷ்டித்து அதன் உண்மைகளை இளைய தலைமுறைக்கும் உலகிற்கும் சொல்ல வேண்டும்.  தடைகள் என்பது தமிழ் மக்களுக்கு புதிய விடயம் இல்லை.

வடக்கு – கிழக்கில் வாழும் அனைத்துத் தமிழர்களும் இனத்தின் விடுதலைப் போராட்டத்திற்கும்  இன ஒற்றுமைக்கும் தமிழன் என்ற அடையாளத்துடன் பணியாற்றியதை யாரும் மறந்து விடமாட்டார்கள். 

இவ்வாறான சூழ்நிலையில் தற்போது வடக்கு – கிழக்கு ஆயர்களின் ஒன்றியம் எடுத்த முடிவை மீள் பரிசீலனை செய்யுங்கள். யுத்தகாலத்திலும் அதற்குப் பின்னரான மக்களின் புனர்வாழ்விலும் ஆயர்களது பணியை வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாது.  அவை மிக அளப்பரிய பணி.

தமிழர்கள் ஆகிய நாம் எங்களுக்குள் முரண்படும் நிலையை தோற்றுவிக்காமல் வார்த்தைகளால் பொது வெளியில் விமர்சிக்காது ஒற்றுமையாக பயணிப்போம். 

 மே – 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை , நவம்பர் 27 மாவீரர் நாள் உள்ளிட்ட அனைத்து நினைவேந்தல்களையும் தொடர்ந்து அதே காலப்பகுதியில் நடத்தி சத்திய வேள்வியில் ஆகுதியாகிய அத்தனை தியாகிகள் மக்களினதும் வரலாறுகளையும் பாதுகாத்திடுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.