Developed by - Tamilosai
உலகம் முழுவதிலுமுள்ள இந்துக்கள் இன்று தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
அந்த வகையில் நீண்ட கால கொரோனா பெருந்தொற்று முடக்கத்திற்கு பின்னர் இலங்கை வாழ் இந்துக்களும் தீபத்திருநாளை இன்று கொண்டாடி வருகின்றனர்.
வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ள போதும் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இம் மக்கள் பண்டிகையை தத்தம் குடும்பங்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதேவேளை தீபத்திருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள கோவில்களில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரிமாளிகையில் இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களோடு தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டதோடு பிரதமர் தனது வாழ்த்து செய்திகளையும் தெரிவித்தார்.
மேலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் விசேட தீபாவளி கொண்டாட்டம் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஐக்கிய மகளிர் சக்தியின் உப தலைவர் உமாசந்திர பிரகாஷின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மனோ கணேசன், பழனி திகாம்பரம், புத்திக பத்திரண மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை கொழும்பு – கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இதில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
புத்தளம் மாவட்டத்தில் தமிழ் மக்கள் இன்று தீபாவளி பண்டிகையை மிகவும் எளிமையாகவும் அமைதியாகவும் தத்தமது வீடுகளில் கொண்டாடி வருகின்றனர். நீராடி புத்தாடை அணிந்து ஆலயங்களுகக்குச் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னிநாதர் சுவாமி ஆலயத்தில் இன்று காலை முதல் தீபாவளி விஷேட பூஜைகள் இடம்பெற்றன.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி மக்கள் முகக் கவசங்களை அணிந்த வண்ணம் வருகைத் தந்ததோடு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
கடந்த ஆண்டு கொவிட் தொற்று காரணமாக தீபாவளிக் கொண்டாட்டம் ஒரு இக்கட்டன நிலையில் காணப்பட்டவேளை இந்த ஆண்டு ஓரளவுக்கு சுமுகமான நிலை காணப்படுவதால் மக்கள் மிக மகிழ்ச்சியோடு தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிவருவதைக் காணக்கூடியதாக உள்ளது.