தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாட்டின் இன்றைய நெருக்கடி நிலைமைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே காரணம் – பிரதமர்

0 444

நாட்டின் இன்றைய நெருக்கடி நிலைமைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே காரணம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச சுமந்திரன் எம். பியிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இதன்போது உறுதியளித்தார்.

நேற்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பிலேயே மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.

பிரதமரின் அழைப்பின்பேரில் நடந்த இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. இதில் பிரதமரின் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் பிரதமரின் பிரதிநிதியுமான கீதநாத் காசிலிங்கமும் பங்கேற்றிருந்தார்.

இந்த சந்திப்பில், “20ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் காணப்படும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கி மீண்டும் 19ஆவது திருத்தச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அமைச்சரவை அனுமதிக்கான முன்மொழிவை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் முன்மொழியவுள்ளேன்.

21ஆவது திருத்தச்சட்டமாக வரவுள்ள இந்த முன்மொழிவுடன் மேலதிகமாக இணைக்கப்பட வேண்டிய சட்ட திருத்தங்கள் வேறு ஏதும் விசேடமானதாக உள்ளனவா?” என்று பிரதமர் மஹிந்த சுமந்திரனிடம் கேட்டார்.

இதற்குப் பதிலளித்த சுமந்திரன் “நீங்கள் குறிப்பிடுவது வரவேற்கத்தக்க விடயமாக இருந்தாலும், ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பு இந்த நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தலாகும். ஆகவே, அதனை மையப்படுத்தி நடவடிக்கை எடுத்தீர்கள் என்றால் சிறந்ததாக இருக்கும்” என்றார்.

பின்னர், “நீங்கள் குறிப்பிடுவது போன்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக இருந்தால் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம். பாராளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம். தற்போதைய நிலையில் அவை சாத்தியமில்லையல்லவா?” என்று பிரதமர் மஹிந்த கூறினார்.

அந்தச் சமயத்தில், “இல்லை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிப்பதற்கு இதுவே பொருத்தமான தருணம். இந்தச் சந்தர்ப்பத்தில் அதனை செயல்படுத்த முடியும். பொதுமக்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை முழுமையாக எதிர்க்கும் மனநிலையில் உள்ளனர். போராட்டங்களை நடத்துகின்றனர். அவ்விதமான நிலையில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் மக்கள் எதிர்க்கமாட்டார்கள். அதற்கான ஆணையை வழங்குவார்கள்.

அதேநேரம், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியானது நாளை (இன்று) காலையில் அந்தக் கட்சியின் செயலாளரான ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயரில் தனிநபர் பிரேரணையொன்றை சபாநாயகரிடத்தில் கையளிக்கவுள்ளது. அந்தப் பிரேரணையானது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாகும். ஆகவே, ஆளும் தரப்பாகவே அம்முறையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றபோது எதிர்க்கட்சியினரும் எதிர்க்கமாட்டார்கள்” என்று பதிலளித்தார் சுமந்திரன்.

எனினும், பிரதமர் மஹிந்த, “அதற்கான சாத்தியப்பாடுகள் எவ்வளவு தூரம் காணப்படுகின்றது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், தற்போதைய நிலையில் நிறைவேற்று அதிகார முறைமையை அதியுச்சமான அளவில் குறைப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளேன்” என்று கூறினார்.

தொடர்ந்து சமகாலத்தில் நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் தொடர்பில் இருவரும் கவனம் பேசினர். இதன்போது, இந்தப் போராட்டங்களை நிறுத்தி சுமுகமான நிலையை ஏற்படுத்துவதற்கான வழிகள் பற்றி பிரதமர் மஹிந்த சுமந்திரனிடத்தில் பரஸ்பர ஆலோசனை செய்துள்ளார்.

இதன்போது, “ஜனாதிபதி கோட்டாபயவை பதவியிலிருந்து விலகி வீட்டுக்குச் செல்லுமாறே இளையோரும் அனைத்து மக்களும் வலியுறுத்துகின்றனர். தொடர்ச்சியாக போராடுகின்றனர். ஆகவே, போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவருவதாக இருந்தால் அவர் (கோட்டாபய) பதவியிலிருந்து விலகுவதைத் தவிர வேறு எந்தத் தெரிவும் தற்போதைக்கு இல்லை” என்று சுமந்திரன் பிரதமரிடம் கூறினார்.

இந்த சமயத்தில், “மக்கள் ஆணைபெற்ற ஜனாதிபதி இவ்வாறான போராட்டங்களுக்காக பதவி விலகுவது பொருத்தமற்றது. அவ்விதமான நிகழ்வுகள் எங்கும் நடைபெறவில்லை” என்று பிரதமர் மஹிந்த தெரிவித்துள்ளார்.

இதன்போது குறுக்கிட்ட சுமந்திரன், “நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு யார் காரணம், நீங்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

“நான் இல்லை. ஜனாதிபதியே காரணம்” என்று பதிலளித்தார் மஹிந்த.

“அப்படியென்றால் ஜனாதிபதி பதவி விலகித்தானே ஆகவேண்டும். மேலும் இரசாயன உர இறக்குமதி மற்றும், சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லுதல் ஆகிய இரு விடயங்களில் தான் தவறிழைத்துள்ளதாக ஜனாதிபதியே ஏற்றுக்கொண்டுள்ளார். ஆகவே தவறு செய்தவர் அதற்கான பொறுப்பை ஏற்பதுதானே பொறுப்புக்கூறலாகும்” என்று சுமந்திரன் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இருவரும் இந்த விடயம் குறித்து பேசவில்லை.

பின்னர், “நீங்கள்தான் எதிர்க்கட்சிக்கும் ஆலோசனை வழங்கியுள்ளீர்கள். அவர்களின் தனிநபர் பிரேரணை உங்களின் ஆலோசனையில்தான் வரையப்பட்டுள்ளது” என்று பிரதமர் மஹிந்த சுமந்திரனைப் பார்த்துக் கேட்கவும், “ஆம் நான் ஒரே விடயத்தைத்தான் கூறுகின்றேன். கட்சிகளின் அடிப்படையில் எனது கருத்துக்களும், நிலைப்பாடுகளும் மாறுவதில்லை” என்று பதிலளித்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.