தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாடாளுமன்ற உறுப்பினர்களை வளைத்துபோட்டு ஆட்சியைக் கவிழ்க்கும் நடைமுறை எமக்கு பொருந்தாது-ஜேவிபி அதிரடி.

0 140

” ஜனநாயக வழியிலான ஆட்சி மாற்றத்தையே ஜே.வி.பி. விரும்புகிறது. அதனையே வலியுறுத்துகின்றது. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்களை வளைத்துபோட்டு ஆட்சியைக் கவிழ்க்கும் நடைமுறை எமக்கு பொருந்தாது.” – என்று ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை,

” இந்நாட்டிலுள்ள இரு பிரதான சம்பிரதாய கட்சிகள்மீது மக்கள் நம்பிக்கையிழந்துவிட்டனர். மாற்று தேர்வு பற்றியும் சிந்திக்கின்றனர். அதற்கான தேர்வாக ஜே.வி.பி. உள்ளது. கீழ்மட்ட ஆதரவு எமக்கு மிக முக்கியம். அதேபோல நாட்டை மீட்பதற்கான பொதுவான வேலைத்திட்டம் தேசிய மக்கள் சக்தி ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, தேசிய மட்டத்திலான தேர்தலொன்று நடத்தப்படும்பட்சத்தில், மக்கள் வாக்களிப்புமூலம் – அதாவது ஜனநாயக வழியில் இடம்பெறும் ஆட்சி மாற்றத்தையே நாம் விரும்புகின்றோம். தேர்தல் ஊடாகவே நாம் மக்களிடம் ஆட்சியைக் கோருவோம். மாறாக உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ஆட்சியைக் கவிழ்க்கும் அரசியல் நடைமுறை எமக்கு பொருந்தாது.

தற்போதைய சூழ்நிலையில் அரசு தேர்தலொன்றுக்கு செல்லாது. ஆனால் மக்கள் எழுச்சியையும் கட்டுப்படுத்த முடியாது. எது எப்படி இருந்தாலும் தேர்தலொன்று நடத்தப்படும்வரை நாம் காத்திருப்போம். தேசிய மட்டத்திலான வேலைத்திட்டமொன்றையும் உருவாக்குவோம்.” – என்றார்.

அதேவேளை, ஜே.வி.பியிலிருந்து வெளியேறிய விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, முன்னிலை சோசலிசக் கட்சி என்பன ஜே.வி.பியுடன் மீண்டும் இணையலாமா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

” ஜே.வி.பி. என்பது ஒரு கட்சி. எனவே, மற்றுமொரு கட்சி இணையமுடியாது. ஆனால் ஜே.வி.பியும் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தியில் இணையலாம். எமது கொள்கையுடன் ஒத்துவர வேண்டும். அது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி கலந்துரையாடி முடிவொன்றை எடுக்கும். ஊழல், மோசடிகளுடன் தொடர்புபட்டவர்கள் எம்முடன் பயணிக்க முடியாது. அது எமது கொள்கைக்கு பொருந்தாது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.