தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தேர்தல் ஒத்திவைப்பு ஜனநாயக விரோதச் செயலாகும் – எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

0 162

உள்ளாட்சிமன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசு எடுத்துள்ள முடிவானது, ஜனநாயக விரோதச் செயலாகும் என விமர்சித்துள்ள எதிர்க்கட்சிகள், உடனடியாக தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தியுள்ளன.
2018 பெப்ரவரியில் தேர்தல் நடத்தப்பட்ட 340 உள்ளாட்சிமன்றங்களின் பதவிகாலத்தை ஓராண்டுக்கு நீடிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது. இதனால் தேர்தலும் ஓராண்டு பிற்போகும்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சுகாதார நிலைமை மற்றும் உள்ளாட்சிமன்றங்களுக்கு உரிய வகையில் செயற்படுவதற்கு நல்லாட்சியின்போது வாய்ப்பு கிடைக்காமை ஆகிய காரணங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டது என அரச தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தேர்தலை எதிர்கொள்ள அஞ்சியும், படுதோல்வியை தவிர்ப்பதற்காகவுமே அரசு பதவி காலத்தை நீடிக்கும் கைங்கரியத்தை கையாண்டுள்ளது என எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
” மக்கள் ஆணையை மீறும் வகையில் பதவி காலம் ஓராண்டு நீடிக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக விரோதச் செயலாகும். இந்த நடவடிக்கையை அரசு மீளப்பெறவேண்டும். உரிய காலப்பகுதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும்.” என்று ஜே.வி.பியின் செயலாளர் நாயகம் வலியுறுத்தினார்.
” இந்த அரசு மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது. மக்கள் கடும் சீற்றத்தில் உள்ளனர். எனவே, தேர்தல் நடத்தப்பட்டால் தோல்வி நிச்சயம். அந்த பயத்தால்தான் தேர்தல் நடத்தப்பாடமல், இழுத்தடிக்கப்படுகின்றது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சுட்டிக்காட்டினார்.
” அரசுக்கு தற்போது மாற்றுவழியில்லை. தோல்வி நிச்சயம் என்பதால்தான் தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுகின்றது. இதனை ஏற்கமுடியாது. உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.” – என்று ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்

Leave A Reply

Your email address will not be published.