Developed by - Tamilosai
தேசிய மற்றும் சர்வதேச சக்திகளுடன் இணைந்து தற்போதைய அரசாங்கத்தின் பயணத்தை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கடும் குற்றச்சாட்டு
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு அன்று செயற்பட்டது போன்றே, தேசிய மற்றும் சர்வதேச சக்திகளுடன் இணைந்து தற்போதைய அரசாங்கத்தின் பயணத்தை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கடும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
ஆளும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது மாநாடு அநுராதபுரத்தில் இன்றுமாலை பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றபோதே அரச தலைவர் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
“அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்கள், எதிர்காலச் சந்ததியினரின் நலனை இலக்கு வைத்தே முன்னெடுக்கப்படுகின்றன. அதனால், எவ்வாறான தடைகள் ஏற்படினும் தொடர்ந்து முன்னோக்கி நகர்வோம்”.
“அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கு இறங்கிப் போராட்டங்களை நடத்துபவர்கள், பொதுமக்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டும். அரச ஊழியர்கள், நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும். புத்தெழுச்சிபெற்று வருகின்ற பொருளாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, நாட்டை முடக்காமல் அரசாங்கத்தின் கொள்கைகளைச் செயற்படுத்த இடமளிப்பதே இன்றைய தேவையாக உள்ளது”.
நாங்கள் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம். இந்த நாட்டின் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாத்துள்ளோம். கடந்த ஆட்சியாளர்கள் பொறுப்பற்று செயற்பட்டதால் இறுதியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. 15 வருடங்களாக அமைச்சர்களாக இருந்தவர்கள் இன்று அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுகின்றனர். அவர்கள் நாட்டிற்காக என்ன செய்தார்கள்.
எமது கொள்கைகள் எதிர்காலத்திற்கானவை. விவசாயிகள், மாணவர்கள் என அனைவரதும் எதிர்காலம் குறித்து சிந்தித்து தீர்மானங்களை மேற்கொள்கின்றோம். எங்களுடன் இணையுமாறும், என் மீது நம்பிக்கை வைக்குமாறும் நான் மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன். எதிர்வரும் மூன்று வருடங்களில் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என உறுதியளிக்கின்றோம்”என மேலும் தெரிவித்தார்.