Developed by - Tamilosai
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டிருக்கும் அனைத்து நிதியையும் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அபிவிருத்திப் பணிகளுக்காகப் பயன்படுத்துவோம். மீண்டும் திறைசேரிக்கு ஒரு ரூபாய் ஏனும் திருப்பியனுப்ப அனுமதிக்கமாட்டோம் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை விவசாயிகளுக்கான விதைப் பொதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் எதிர்வரும் டிசெம்பர் மாதத்துக்கு முன்பு விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக 50,000 இஞ்சி விவசாயிகளுக்கும் 3000 உளுந்து விவசாயிகளுக்கும் 2500 பாசிப்பயறு உற்பத்தி செய்யும் விவசாயிகளையும் 7000 கூட்டெரு உரம் தயாரிக்கும் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன.
இந்த வேலைத் திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள விவசாயிகளையும் வலுப்படுத்துவது எமது நோக்கமாக இருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி குறித்து பல்வேறு முன்மொழிவுகளை நான் அரசாங்கத்திற்கு முன் வைத்துள்ளேன்.
எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணத்திற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பாரியளவில் உள்வாங்கப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.