தமிழ் ஓசை
தமிழ் ஓசை

‘திருடன் ஒருவன், அனைவரும் திருடுவார்கள் என்றே நம்புகின்றான்’ – அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

0 70

இலங்கை உள்ளடங்கலாக உலகநாடுகள் பலவற்றிலும் சீனா அதன் இராணுவப் படைத்தளங்களை நிறுவுவதற்குத் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்காவால் வெளியிடப்பட்டுள்ள கருத்துத் தொடர்பில் பதிலளித்துள்ள இலங்கையிலுள்ள சீனத்தூதரகம்,  ‘திருடன் ஒருவன், அனைவரும் திருடுவார்கள் என்றே நம்புகின்றான்’ என்று தெரிவித்துள்ளது.

இலங்கையில் இராணுவத் தளங்களையும் அதனுடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகளையும் நிறுவுவதற்கு சீனா திட்டமிட்டுவருவதாக இராணுவ மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்து சீனாவால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்கப் பாதுகாப்பு இராஜாங்கத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பாதுகாப்பு இராஜாங்கத் திணைக்களத்தின் அவ்வறிக்கையில் சீனா அதன் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளின் பலத்தை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் வகையில் உலகில் பல்வேறு நாடுகளிலும் இராணுவத்தளங்களையும் அதற்கேற்றவாறான உட்கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்குவதற்கு விரும்புவதுடன் அதுகுறித்து ஏற்கனவே திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கம்போடியா, மியன்மார், தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, பாகிஸ்தான், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, சீஷெல்ஸ், தன்சானியா, அங்கோலா மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் சீனா அதன் இராணுவத் தளங்களையோ அல்லது இராணுவ ரீதியான உட்கட்டமைப்பு வசதிகளையோ நிறுவுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

‘திருடன் ஒருவன், அனைவரும் திருடுவார்கள் என்றே நம்புகின்றான்’, ஆப்கானிஸ்தானில் நிறுவப்பட்டிருந்த இராணுவத் தளத்தையும் படையினரையும் அமெரிக்கா நீக்கிக்கொண்டிருந்தாலும் இன்னமும் வெளிநாடுகளில் சுமார் 750 அமெரிக்கப் படைத்தளங்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு இந்தப் படைத்தளங்கள் நிதியியல், அரசியல், சமூகவியல் மற்றும் சூழலியல் ரீதியில் மிகுந்த ‘பெறுமதிவாய்ந்தவை’ ஆகும் என்றும் சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான தரவுகளின் பிரகாரம் வெளிநாடுகளில் அமெரிக்காவால் படைத்தளங்கள் நிறுவப்பட்டிருக்கும் இடங்கள் அடங்கிய உலக வரைபடமொன்றையும் சீனத்தூதரகம் அதன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

Leave A Reply

Your email address will not be published.