Developed by - Tamilosai
மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை பொலிஸார் நிறுத்தியபோது அதனைப் பொருட்படுத்தாமல் குறித்த நபர் சென்றதாலேயே பொலிஸ் அதிகாரி தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் அதிகாரி தாக்கும் வகையிலான காணொலி வெளியாகி நேற்றுப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பொலிஸ் அதிகாரிக்கு தாக்குதல் நடத்த எந்த உரிமையும் இல்லை எனத் தெரிவித்துள்ள சரத் வீரசேகர, இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
அத்தோடு பொலிஸ் நிலையங்களுக்குப் பொறுப்பான அதிகாரி அல்லது பிற கீழ்நிலை அதிகாரிகள் ஏதேனும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைக் கண்டறிந்தால் ஏ.எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
இலஞ்சம் கோருதல், பாலியல் இலஞ்சம் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.