தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தமிழ் பேசும் கட்சிகளை அணிதிரட்ட சம்பந்தன் தீர்மானம்!

0 148

புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாட்டில் தமிழ் பேசும் மக்கள் அபிலாஷைகளை மையப்படுத்தி அதில் உள்ளீர்க்கப்பட அல்லது மாற்றியமைக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக தமிழ் பேசும் கட்சிகளை ஒரு தளத்தில் அணிதிரட்டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தீர்மானித்துள்ளார்.

இத்தீர்மானத்தின் அடிப்படையில் பாராளுமன்றில் வைத்து பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரிடத்தில் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். 

இந்தச் சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனும்  பிரசன்னமாகியிருந்தார்.

இவ்விடயம் சம்பந்தமாக மேலும் சம்பந்தன் மேலும் தெரியவருகையில்;

13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை வலியுறுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வடக்கிலுள்ள தமிழ்க் கட்சிகள் ஒருங்கிணைந்து தீர்மானித்ததோடு, அந்தக் கடிதத்தை இறுதி செய்வதற்காக கடந்த 2ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கூட்டமொன்றையும் நடத்தியிருந்தன.

இந்தக் கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இருப்பினும், இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியப் பரப்பில் முக்கிய கட்சிகளான இலங்கைத் தமிழரசுக்கட்சியும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் பங்கேற்றிருக்கவில்லை.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்தவரையில் கொள்கை அளவில் ஒற்றையாட்சி அரசியலமைப்பில் காணப்படும் 13 ஆவது திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கு தாம் தயாராக இல்லை என்று பகிரங்கமாகக் கூறியுள்ளது.

இந்நிலையில் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அமுலாக்கக் கோரும் செயற்பாட்டில் தாங்கள் பங்கேற்க முடியாது என்பதையும் அக்கட்சி தர்க்கரீதியாக நியாயப்படுத்தியுள்ளது.

இவ்வாறிருக்கையில், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மேற்படி கட்சிகளின் ஒருங்கிணைவுச் செயற்பாட்டிற்கு ஆதரவை அளித்து வந்த நிலையில் அவருடைய கட்சியினரே அரசியல் பீடத்தில் குறித்த கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்ற தொனிப்பட்ட தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், சம்பந்தன் இக்கூட்டத்தில் பங்கேற்பதற்கான ஏது நிலைமைகள் இன்மையால் கூட்டத்தை பிற்போடுமாறு மாவை சேனாதிராசா ஏற்பாட்டாளர்களிடம்  கோரியுள்ளார்.

எனினும் ஏற்பாடுகள் பூர்த்தியாகி விட்டதால் குறித்த கூட்டத்தை பிற்போட முடியாது என்று பங்காளிகள் தெரித்துவிட்டார்கள்.

 இதனால் திட்டமிட்டபடி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற மனோ கணேசனும், ரவூப் ஹக்கீமும் குறித்த கட்சிகளின் ஒருங்கிணைவில் தமிழரசுக்கட்சியின் பங்கேற்பின் அவசியத்தை வலியுறுத்தினர்.

பின்னர் கொழும்பு திரும்பியதும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.
 இதன்போது சம்பந்தன் சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளார். 

இந்தப் பின்னணியில், கடந்த பாராளுமன்ற அமர்வின்போது ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோரை சந்தித்த சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

குறிப்பாக, புதிய அரசியலமைப்புக்கான வரவொன்று இந்த ஆண்டு இறுதிக்குள் வரவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே கூறியுள்ள நிலையில் அதுபற்றி விசேட கரிசனை கொள்ளப்பட வேண்டும் என்று சம்பந்தன் கூறியுள்ளார்.

மேலும், இந்த விடயத்திற்காக தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய சிறு, சிறுபான்மைக் கட்சிகள் ஆகியவற்றை அழைத்துப் பேசுவதற்கு தான் தீர்மானித்துள்ளதாகவும் சம்பந்தன் பங்காளிக்கட்சித் தலைவர்களிடத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலை சுமந்திரன், அமெரிக்காவிலிருந்து மீண்டும் நாடு திரும்பியதும் நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் சம்பந்தன் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் அரசியலமைப்பு விடயங்கள் பற்றி பேசப்படவுள்ளதால் அங்கு நடைபெறும் கலந்துரையாடல்களின் அடிப்படையில் அடுத்தகட்டச் செயற்பாடுகளை முன்னெடுப்பது பொருத்தமானதாக இருக்கும் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இதனைவிடவும் தமிழ் பேசும் கட்சிகளையும் முற்போக்கு கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரே மேடையில் அழைத்து கூட்டத்தை நடத்துவதா? இல்லையா? தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள கட்சிகளுக்கு இடையில் முதல் கூட்டத்தை நடத்திவிட்டு ஏனைய தரப்புக்களை அழைப்பதா? என்பது தொடர்பிலும் சம்பந்தன் பங்காளிக்கட்சிகளுடன் ஆராய்ந்துள்ளார்.

முன்னதாக  13 ஆவது திருத்தச்சட்டத்தை மையப்படுத்தி ரெலோ, அரசியல் கட்சிகளை ஒருங்கிணைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. 

தற்போது சம்பந்தன் அவ்விதமான நகர்வொன்றினை ஆரம்பிக்கவுள்ளதால் ரெலோவின் 13 ஆவது திருத்தத்தை மையப்படுத்திய நகர்வு புதிய அரசியலமைப்பை மையப்படுத்தியமாக தடம் மாறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.