தமிழ் ஓசை
தமிழ் ஓசை

‘தமிழ் இனப்படுகொலை’ குற்றச்சாட்டை மறுப்பது-வெளியாகியுள்ள அறிக்கை.

0 352

இலங்கை மீது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆதாரமற்ற போர்க்குற்றக் குற்றச்சாட்டுகளைத் தொடர, 2015 பொறுப்புக்கூறல் தீர்மானத்திற்கு வழிவகுத்த செயற்பாட்டில் குறைபாடுகள் காணப்படுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அப்போதைய இலங்கையின் எதிர்க்கட்சியினரும், ஆயுதப்படையினரும் கடுமையான கவலைகளை வெளிப்படுத்திய போதிலும், இலங்கைக்கு எதிரான சர்ச்சைக்குரிய தீர்மானத்திற்கு நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியதாக, கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹர்ஷ குமார நவரத்ன தெரிவித்துள்ளார்.

ஒட்டாவாவிலுள்ள இலங்கை தூதரகத்தால் இலங்கையின் இறுதிக்கட்ட மோதலில் ‘தமிழ் இனப்படுகொலை குற்றச்சாட்டை மறுப்பது” என்ற தலைப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. போருக்குப் பிந்தைய உண்மையான தேசிய நல்லிணக்கத்தில் ஆர்வமுள்ளவர்கள் உரையாடல்களை ஆரம்பிக்க வேண்டுமென, குறித்த அறிக்கையின் ஊடாக கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹர்ஷ குமார நவரத்ன வலியுறுத்தியுள்ளார்.

இனப்படுகொலை என்ற சொல் மனிதகுலத்திற்கு எதிரான மிகப்பெரிய குற்றங்களில் ஒன்றை பயன்படுத்தப்படுவதாகவும், இது ஒரு தேசிய, இன அல்லது மதக் குழுவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் குறிப்பிட்ட செயல்களை உள்ளடக்கியது எனவும் ஹர்ஷ குமார நவரத்ன குறிப்பிட்டுள்ளார்.

எனவே, 2009 இல் முடிவடைந்த இலங்கையின் இறுதிக்கட்ட மோதலை இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையாக சித்தரிக்க கனடாவில் உள்ள சில தரப்பினரின் முயற்சிகளை கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தீவிர கவலையுடன் அவதானிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் உள்ள இலங்கை சமூகம் பல இனங்கள் மற்றும் பல மதங்களைக் கொண்டுள்ளதாகவும், இந்நிலையில், கனடாவின் ஒன்டாறியோ மாகாணத்தில் நிறைவேற்றப்பட்ட ‘தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்’ தொடர்பான தனியார் சட்டம் ஊடாக, ஒரு சமூகத்திற்கு எதிரான தவறான கதையை சித்தரிப்பதன் மூலம் இலங்கை சமூகத்தினரிடையே சமூக உறவுகளில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சூழலில், தமிழ் இனப்படுகொலை என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவது, ஒன்டாறியோவில் வசிக்கும் இலங்கைக் கனேடியர்களின் பிள்ளைகள் மற்றும் சமூகத்தினரிடையே கருத்து வேறுபாடுகளையும் தப்பான எண்ணத்தையும் உருவாக்குகிறது.

எனவே, சர்வதேச சமூகத்தில் இலங்கை பற்றிய தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதைத் தடுப்பதற்கும் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை ஒழிக்க வேண்டும்மென குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் 2015ஆம் ஆண்டு இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த முக்கிய கண்டுபிடிப்புகளில் இனப்படுகொலையை பரிந்துரைக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இனப்படுகொலையின் கூற்றை ஆதரிக்கும் குழுக்கள், மோதலின் இறுதி மாதங்களில் 40 ஆயிரம் பொதுமக்கள் இறந்திருக்கலாம் என்ற அறிக்கையில் எந்த ஆதாரமும் இல்லாமல் தெரிவிக்கப்பட்ட கூற்றை உதாரணமாக கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2009 இல் மோதல் முடிவுக்கு வந்ததில் இருந்து, இழப்பீடு, மீள ஒருங்கிணைப்பு, புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றின் கொள்கையை மறுசீரமைப்பதில் இலங்கை முன்னின்று செயற்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், அரசாங்கப் படைகள் சுமார் 290,000 தமிழ் பொதுமக்களை விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து மீட்டு, அவர்களைக் பராமரித்து, அவர்களை மீள் குடியேற்றியிருந்தது. மேலும், 12,000 க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதுடன், இதன் மூலம் எதிரிப் போராளிகள் மத்தியிலும் தேவையற்ற மரணங்களை ஏற்படுத்துவதை இலங்கை அரசாங்கம் தவிர்த்துள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இந்த செயல்முறைகளை முன்னெடுத்துச் செல்லும் நேரத்தில், விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் எஞ்சிய உறுப்பினர்கள் உட்பட சில குழுக்கள், தமிழ் இனப்படுகொலை போன்ற நிகழ்ச்சி நிரல்களை முன்வைத்து இலங்கை மேற்கொண்ட முயற்சிகளை மதிப்பிழக்கச் செய்யவும், சீர்குலைக்கவும் முயற்சித்து வருவதாக ‘தமிழ் இனப்படுகொலை’ குற்றச்சாட்டை மறுப்பது என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைவருக்கும் இலங்கை உயர்ஸ்தானிகர் இந்த விடயம் தொடர்பில் தன்னைப் பார்வையிடவும், சந்திக்கவும், உரையாடவும் ஒரு திறந்த அழைப்பை விடுக்கின்றார். (அரசாங்க தகவல் திணைக்களம்)

Leave A Reply

Your email address will not be published.