தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தமிழக பல்கலைக்கழகங்களில் வாய்ப்பு

0 444

தமிழகத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான குழு, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது.

இந்த விஜயத்தின் போது, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் உட்பட இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்களின் பல்வேறு நல திட்டங்கள் தொடர்பாக தமிழக முதலமைச்சருடன் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கைவாழ் இந்திய வம்சாவளி தமிழ் மாணவர்களுக்கு இந்திய மத்திய அரசின் புலமை பரிசில்களுக்கு மேலதிகமாக “மருத்துவம், பொறியியல், விவசாயம், தொழில்நுட்பம்” துறைகளுக்கான பட்டப்படிப்பை தொடர்வதற்கான 100 கல்வி புலமைப்பரிசில்களை தமிழக பல்கலைக்கழகங்களினூடாக பெற்றுக்கொள்ளுதல், விரைவில் அமையவிருக்கும் மலையக பல்கலைக்கழகத்திற்கான விரிவுரையாளர்கள் மற்றும் தொழில்சார் உத்தியோகத்தர்களை தமிழக அரசின் உதவியுடன் பெற்றுக்கொள்ளல் மற்றும் தமிழகத்தின் முன்னணி பல்கலைக்கழகங்களுடன் மலையக பல்கலைக்கழகத்தினை இணைத்து நடத்துவதற்கான அங்கீகாரங்களை பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு மலையக பெருந்தோட்ட பகுதிகளில் செயற்படும் தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் மோட்டார் வாகன தொழில்நுட்பம், இலத்திரணியல், கட்டுமானம், கணினி தொழில்நுட்பம் மற்றும் விவசாய பொறிமுறையை, தொழில்நுட்ப துறைசார் வளவாளர்களை இந்திய தொழில்துறை நிபுணர்களால் பயிற்சி அளிப்பது தொடர்பாகவும்

மலையக பாடசாலை ஆசிரியர்களுக்கான கணினி, விஞ்ஞானம், ஆங்கிலம் பாட கல்விசார் மேம்பாடு பயிற்சிகளை இந்திய கல்வியாளர்களால் பயிற்ச்சி வழங்கவும், பாடசாலை கல்வியினை முடித்து வெளியேறும் இளையோர்களுக்கு சிக்கன முறையில் ஆடு, மாடு, கோழி போன்ற வேளாண்மை துறை ஈடுபாட்டுக்கான பயிற்சிகளையும் நிதி வளங்களை ஏற்பாடு செய்தலும், வேளாண்மைக்கான பாரிய முதலீட்டு வாய்ப்புகளை தமிழக அரசினூடாக பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாகவும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது.இதன்போது கோரிக்கைகளை உள்ளடக்கிய கடிதமொன்றையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கையளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.