தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கொக்கைன் போதை பொருள் கடத்திய 8 பேர் கைது

0 342

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கொக்கைன் போதை பொருள் கடத்திய முக்கிய குற்றவாளியான காடல்குடி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் பாலமுருகன் உட்பட 8 பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலர் குறித்து தகவல் கிடைத்துள்ளதால் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

ராமேஸ்வரம் அருகே இலங்கை உள்ளதால் தனுஷ்கோடி கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் போதைப் பொருட்களான கஞ்சா, ஹெராயின், பீடி இலை, கொக்கைன் மற்றும் கடல் அட்டை, கடல் குதிரை, சமையல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது.

கடல் வழியாக நடைபெறும் கடத்தல் சம்பவங்களை தடுக்க இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் இந்திய, இலங்கை கடற்படையினர் தீவிர கண்காணிப்ப பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கடற்கரை பகுதியில் கடலோர காவல் குழும போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கொக்கைன் போதைப் பொருள் கடத்த இருப்பதாக ராமநாதபுரம் தீவிர குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து வியாழக்கிழமை காலை ராமேஸ்வரம் பகுதியில் தொடர்ந்து சோதனை செய்து வந்தனர்.

அப்போது ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே தனியார் நட்சத்திர விடுதிக்கு பின்புறம் ஒரு கும்பல் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்ததை கண்ட தீவிர குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் அவர்களிடம் விசாரணை செய்ய அவர்கள் அருகே சென்ற போது போலீஸ் வருவதை அறிந்து அவர்கள் தப்பி ஓட முயற்சித்துள்ளனர்.

தீவிர குற்றப்பிரிவு போலீசார் அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் இருந்து பவுடர் பாக்கெட் ஒன்று கைபற்றப்பட்டது. அந்த பவுடரை சோதனை செய்ய ராமநாதபுரத்தில் உள்ள போதை தடுப்பு பிரிவினருக்கு அனுப்பி வைக்கபட்டது.

அந்த சோதனை அந்த பவுடர் கொக்கைன் போதை பொருள் என முதல் கட்டமாக உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து முழு ஆய்வறிக்கை பெறுவதற்காக அந்த பவுடரில் 10 கிராம் சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பட்டு சோதனை செய்ததில் கொக்கைன் என உறுதிபடுத்தப்பட்டது.

இதனையடுத்து தீவிர குற்றப்பிரிவு போலீசாரிடம் பிடிபட்;ட சிவகங்கை மாவட்டம் சூரியகுமார் பாம்பனை சேர்ந்த மனோஜ், சாதிக் அலி, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த முகமது இஸ்மாயில், அங்குரத ராம் ஆகிய 5 பேர் மீது ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசரணை நடத்தப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் ஒன்று வெளியானது இலங்கைக்கு கொக்கைன் போதை பொருள் கடத்த மூளையாக செயல்பட்டு வந்தது ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என தெரிய வந்தது.

இவர் 2013 ஆம் ஆண்டு காவல் துறையில் பணிக்கு சேர்ந்து ராமேஸ்வரம் கடலோர காவல் குழும சோதனை சாவடியில் பணியாற்றி தற்போது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்துள்ள காடல்குடி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இதனையடுத்து தீவர குற்றப்பிரிவு போலீசார் பாலமுருகனை கைது செய்ய முயன்ற போது காவல்துறையில் உள்ள அவரது நண்பர்கள் சிலர் பாலமுருகனுக்கு உதவி செய்ததில் காவலர் பாலமுருகன் தலைமறைவானார்.

போலீசார் தொடர்ந்து தேடி வந்த நிலையில் அவர் வெள்ளிகிழமை காலை கமுதி அருகே காவலர் பாலமுருகன் போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். காவலர் பாலமுருகன் உட்பட 8 பேரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் போதை பொருள் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். காவலர் பாலமுருகனுடன் சில போலீசார் தொடர்பில் இருந்ததாகவும் அவரது உதவியுடன் இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வந்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவின் பெயரில் தனிப்படைகள் அமைத்து காவல்துறையில் பாலமுருகனுடன் தொடர்பில் இருந்தவர்கள் கடலோர காவல் குழும பிரிவு காவலர்கள் என பலரிடம் தனி தனியாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விசாரணை முடிவில் பல காவலர்கள் மற்றும் காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் இவ்வழக்கில் சிக்குவார்கள் என தெரிய வருகிறது.

தீவிர குற்றப்பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ஒன்றரை கிலோ கொக்கைன் சர்வதேச மதிப்பு சுமார் 8 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.