Developed by - Tamilosai
நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை, நாளை(ஒக்டோபர் மாதம்) 31ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு நீக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய பொதுமைப்படுத்தலின் கீழ், பொதுமக்களின் வாழ்க்கை முறைமை பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கொவிட் தொற்றொழிப்புச் செயலணிக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கொவிட் வைரஸ் பரவல் காரணமாக பாடசாலை மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அது தொடர்பில் அவதானம் செலுத்தி, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரங்களுக்கான பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான சுகாதாரப் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில், பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தி, கல்வி நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன், பல்கலைக்கழக முதலாமாண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விரைவில் ஆராயுமாறும், சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
பொது இடங்கள், வர்த்தக நிலையங்கள், சிற்றுண்டிச் சாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் இடங்களுக்குச் செல்லும் போது, தடுப்பூசி அட்டையைக் கட்டாயம் எடுத்துச் செல்வதற்கான இயலுமை தொடர்பில் உடன் கண்டறியவும், இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க, கொரோனா சட்டதிட்டங்களில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதென்று சுட்டிக்காட்டிய சுகாதார அதிகாரிகள், இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றலின் முன்னேற்றம் தொடர்பிலும், ஜனாதிபதி இதன்போது ஆராய்ந்தறிந்தார்.