தமிழ் ஓசை
தமிழ் ஓசை

டயஸ்போரா இலங்கை அரசிடம் சோரம் போகக் கூடாது – சபா குகதாஸ் வலியுறுத்தல்

0 147

இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியாக நெருக்கடியை ஏற்படுத்தும் புலம் பெயர் அமைப்புக்கள் இடையே உடைவினை ஏற்படுத்த கோட்டாபய அரசாங்கம் முன்னெடுத்துள்ள வியூகமே டயஸ்போராவைச் சந்திக்கும் நாடகம் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்:

தமிழர் தாயகத்தில் தேசியத்திற்கு எதிராக தன்னுடைய அரசாங்கத்தில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கும் ஜனாதிபதிக்கு டயஸ்போராவிலும் குறிக்கப்பட்ட அமைப்புக்களை பிரித்து தன்னுடன் இணைக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.

 காரணம் அமெரிக்க ஐரோப்பிய மேற்குலகத்தின் ஆதரவைப் வலுப்படுத்த டயஸ்போராவின் ஆதரவு அவசியமாகவுள்ளது அதனால் சோரம் போகக் கூடிய அமைப்புக்களை தங்கள் பக்கம் திருப்ப முயற்சிக்கின்றனர் இதற்கு ஒரு போதும் புலம்பெயர் அமைப்புக்கள் சோரம் போகக் கூடாது.

தமிழ மக்களை வைத்து அரசியல் செய்யும் இலங்கை அரசாங்கம் தாயகத்தில் தொடர்ந்தும் நில ஆக்கிரமிப்பையும் மாகாணங்களுக்கான அதிகாரங்களை மத்திய அரசிற்கு எடுத்தலும் முடிவில்லாத தொடர் நடவடிக்கையாக மாறியுள்ளது.

 இவ்வாறான சூழ்நிலையில் ராஜபக்ஷ அரசாங்கத்தில் பலருக்கு சர்வதேச ரீதியான தடைகள், குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில் அவர்கள் மேற்குலக நாடுகளுக்குச் செல்லும் போது டயஸ்போராவின் எதிர்ப்பு பெரும் பின்னடைவாக உள்ளது.

 அதனைத் தடுக்க டயஸ்போராவை தங்கள் நிகழ்ச்சி நிரலுக்கு உட்படுத்த வேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்திற்கு அவசியமாகி உள்ளது,

அத்துடன் ஐ. நா. மனிதவுரிமைப் பேரவையின் விடையதானங்களில் புலம் பெயர் அமைப்புக்களின் உட்பிரவேசம் இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் தலையிடியாகத் தொடர்கிறது அதற்கு மருந்து கட்ட டயஸ்போராவை தமது பக்கம் பேச வைக்க வேண்டும். 

ஆகவே இவை எல்லாவற்றுக்குமான முன்நகர்வு தான் டயஸ்போராவை கட்டியணைக்கத் துடிக்கும்  இராஜதந்திரம். எனவே எச் சந்தர்ப்பத்திலும் நிதானம் இழக்காது புலம் பெயர் அமைப்புக்கள் கோட்டாபய அரசாங்கத்துக்கு சோரம் போகக் கூடாது.

தமிழர் தாயகத்தில் வாழும் மக்களுக்கு தற்போதைய பலமான சக்தி டயஸ்போரா என்பதை இவ்  அமைப்புக்கள் மறந்துவிடக்கூடாது.

 ஒற்றுமையாக பலமான கோரிக்கைகளை முன்வைத்து பேரம் பேசும் பலத்தை இழந்துவிடாமல் தொடர்ந்து பேணுங்கள்  என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.