தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஞானசாரர் தலைமையில் ஜனாதிபதி செயலணி : சர்வதேச அமைப்புக்கள் கடும் விசனம்

0 178

இனவாதியாக அறியப்படும் ஞானசாரதேரரின் தலைமையில் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கொள்கை தொடர்பான செயலணி உருவாக்கப்பட்டுள்ளமை குறித்து தமது கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள், இப்புதிய செயலணியின் செயற்பாடுகள் இறுதியில் இலங்கையின் சிறுபான்மையின சமூகத்தை இலக்குவைப்பவையாக மாறக்கூடும் என்றும் எச்சரித்திருக்கின்றன.

அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரையின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இலங்கைக்குள் ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்ற கொள்கையை செயற்படுத்தும் வரைபைத் தயாரிப்பதற்கு பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் அடங்கிய விசேட ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுவந்தவரும் அதன் காரணமாகப் பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தவருமான ஞானசார தேரரின் தலைமையில் மேற்படி புதிய செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறித்தும் 13 உறுப்பினர்களில் 4 முஸ்லிம்கள் உள்ளடங்குகின்ற போதிலும் தமிழர்கள் எவரும் உள்வாங்கப்படாமை குறித்தும் உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதன்படி இப்புதிய செயலணி உருவாக்கம் குறித்து சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழுவினால் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில் பின்வருமாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கொள்கை தொடர்பில் ஆராய்வதற்காகப் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி செயலணியின் செயற்பாடுகள், இறுதியில் இலங்கையின் சிறுபான்மையின சமூகத்தை இலக்குவைப்பவையாக மாறக்கூடும் என்ற கரிசனை எமக்கு ஏற்பட்டிருக்கின்றது.

அதேவேளை நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக ஏற்கனவே சிறைப்படுத்தப்பட்டிருந்தவரும் மிகவும் மோசமான இனவாதி என்று பகிரங்கமாக அறியப்பட்டவருமான ஒருவர் அச்செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதானது, குறித்த செயலணிக்கான நியமனங்களின் பின்னாலுள்ள நோக்கங்கள் தொடர்பில் வலுவான சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி மேற்படி செயலணிக்கு மிகவும் பரந்தளவிலான பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்ச்சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வெகுசிலரே நியமிக்கப்பட்டுள்ளமை குறித்தும் செயலணியில் பெண் பிரதிநிதிகள் எவரும் இல்லாமை குறித்தும் கவலையடைகின்றோம்.

மேலும் நாடுகளின் சட்டங்கள் சர்வதேச மனித உரிமைச்சட்டம் மற்றும் சர்வதேச தரத்திற்கு அமைவானதாக இருக்கவேண்டும் என்ற எமது நம்பிக்கையை மீளவலியுறுத்தும் அதேவேளை, ஏற்கனவே நீதியமைச்சின் ஊடாக சட்டமறுசீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அதற்கென புதியதொரு செயலணி தேவையில்லை என்று சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.