தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஜனாதிபதி ,பிரதமர் தலைமையில் இலங்கையின் 74ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்

0 207

சவால்களை வெற்றி கொண்ட வளமான நாள் – சுபீட்சமான தாய் நாடு’ என்ற தொனிப்பொருளில் ,இலங்கையின் 74ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் இன்று (04) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளன.

கொரோனா தொற்றின் காரணமாக சுகாதார வழிமுறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு தேசத்தின் அபிமானத்தைகாக்கும் வகையில் வழக்கம்போன்று எவ்வித குறைபாடுகளுமின்றி கம்பீரமானதாகவும் எளிமையான முறையிலும் அனைத்து நிகழ்வுகளும் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இம்முறை சுதந்திர தின அணி வகுப்புகளில் 3,463 இராணுவத்தினரும் 919 கடற்படையினரும் 804 விமானப் படையினரும் 336 பொலிசாரும் 282 பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் 437 சிவில் பாதுகாப்புப் படையினருமாக மொத்தமாக 6,500 முப்படை வீரர்கள் மற்றும் பொலிஸார் அணி வகுப்புக்களில் கலந்து கொள்ளவுள்ளனர்.

விமானப் படையினரின் விமான சாகசங்களும் நடைபெறவுள்ளன. வழமை போன்று இராணுவ, கடற்படை மற்றும் விமானப் படையின் அணிவகுப்புடன் முப்படைகளின் பல்வேறு வகையான கவச வாகனங்களும் இயந்திரங்களும் அணிவகுத்து செல்லவுள்ளன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத வழிபாட்டு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

சுதந்திரத்திற்காக போராடிய அனைத்து தலைவர்களையும் நினைவு கூர்ந்து இம்முறை சுதந்திர தினத்தன்று மலர் அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாலுள்ள உருவச்சிலைகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

சுதந்திரதின நிகழ்வுகளில் இம்முறை பொது மக்கள் பங்கேற்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.
அத்துடன் கொழும்பு 07 சுதந்திர சதுக்க பிரதேசம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் 21 வீதிகள் மூடப்பட்டுள்ளதுடன் அதற்கான மாற்றுவழிகளை வாகன பயன்படுத்துமாறு மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் அறிவித்துள்ளார்.

சுதந்திர தின நிகழ்வுகளில் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் அணிவகுப்புகள் இடம்பெறுவதுடன் கலை கலாசார அம்சங்களும் வழமைபோன்று இடம்பெறவுள்ளன. பாடசாலை மாணவ மாணவிகள் ஜய மங்கள கீதம் இசைப்பதுடன் அவர்களுக்கு மேலதிகமாக தேசிய மாணவர் படையணிகளைச் சேர்ந்த 259 மாணவ மாணவியர் பங்கேற்கும் பாரம்பரிய கலை கலாசார அம்சங்களும் நடை பெறவுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின நிகழ்வுகளை ஆரம்பித்து வைப்பதுடன் தேசிய கீதத்தையடுத்து பாடசாலை மாணவ மாணவிகளின் ஜய மங்கள கீதம் இசைக்கப்படும். அத்துடன் நாட்டின் சுதந்திரத்திற்காக தியாகம் செய்த அனைவரையும் நினைவு கூர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

அத்துடன் ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்படவுள்ளன. அதனைத்தொடர்ந்து சுதந்திர சதுக்கத்திலருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு தனதுசுதந்திர தின பிரதான உரையை நிகழ்த்தவுள்ளார்.

இம்முறை தேசபிதா டி.எஸ். சேநானாயக்கவிற்கு மேலதிகமாக தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக அவருடன் இணைந்து போராடிய ஏனையவர்களுக்கும் மலர் அஞ்சலி செலுத்தப்படவுள்ளதாக அமைச்சர்சமல் ராஜபக்ஷ தெரிவித்தார

இதேவேளை, கொழும்பில் நடைபெறும் பிரதான நிகழ்வுகளுக்கு மேலதிகமாக சமகாலத்தில் நாடளாவிய ரீதியில் பல்வேறு பிரதேசங்களிலும் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு பாதுகாப்பு கடமைகளில் மூவாயிரத்திற்கும் அதிகமான பொலிஸார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேச பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். விசேட நடவடிக்கைக்கான செயலணி மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டு பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திரதின விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ள விசேட அதிதிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அழைப்பிதழில் இணைக்கப்பட்டுள்ள வாகன தரிப்பிடலேபிள்களுடன் காலை 7.30மணிக்கு முதல் வருகை தருமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.இலங்கை கடற்படையினரால் தாய் நாட்டிற்காக கஜபாகு கப்பலிலிருந்து 25 பீரங்கி வேட்டுக்கள் காலி முகத்திடலில் தீர்க்கப்படவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.