Developed by - Tamilosai
” ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டங்களை மக்கள் தீவிரப்படுத்த வேண்டும். அவர் பதவி விலகும்வரை ஓயக்கூடாது.”இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நேற்று அறைகூவல் விடுத்துள்ளார்.மக்கள் போராட்டங்களை, வன்முறையாக மாற்றுவதற்கு ஆளுந்தரப்பு முயற்சிக்கின்றது, எனவே, மக்கள் விழிப்பாகவும் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.இது தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க மேலும் கூறியவை வருமாறு,” ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்பதே நாட்டு மக்களின் பிரதான கோரிக்கையாக இருக்கின்றது. ஆனால் அவர் அந்த முடிவை எடுக்கமாட்டார் என ஆளுங்கட்சி உறுதியாக அறிவித்துவிட்டது. மக்களின் கோரிக்கைக்கு செவிமடுக்க அரசு தயாரில்லை என்பதையே இதன்மூலம் ஆட்சியாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.எனவே, ஆட்சி கட்டமைப்புக்கு எதிரான போராட்டத்தை மக்கள் தீவிரப்படுத்த வேண்டும். எந்தவொரு காரணத்துக்காகவும் நிறுத்திவைக்ககூடாது. ஏனெனில் தனி நபர் ஒருவருக்காக நாட்டு பிரஜைகளின் கோரிக்கையை புறக்கணித்துவிடமுடியாது. இந்த தனிநபரை விரட்டியடிப்பதற்கான உரிமை நாட்டு மக்களுக்கு இருக்கின்றது.மக்கள் போராட்டங்களுக்கு நாம் முழு ஒத்துழைப்பை வழங்குவோம். தலையீடுகளை செய்வோம். தேசிய மக்கள் சக்தியாலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.மக்கள் போராட்டங்களை வன்முறையாக்க அரசு முற்படும். மிரிஹானயில் அது நடந்தது. இது தொடர்பில் எமக்கு தகவல் கிடைத்துள்ளது.” – என்றார்.