தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு விரைவில் கவிழும் – இராதாகிருஷ்ணன்

0 458

தற்போது இலங்கை மக்களும் கொதித்தெழுந்துள்ளனர். எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு விரைவில் கவிழும் என நாடாளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, தொடர் மின்வெட்டு, பொருட்கள் விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்நிலைமையை உருவாக்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் தலவாக்கலையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சூளுரைத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” மக்கள் சக்திக்கு முன் அரசியல் சக்தியால் துணிந்து நிற்க முடியாது. நிச்சயம் மண்டியிட்டாக வேண்டும். இதுவே வரலாறு எமக்கு கற்று தந்துள்ள பாடம். சர்வாதிகாரிகளான சதாம் உசைன், முகாகே போன்றவர்களின் சாம்ராஜ்ஜங்கள்கூட மக்கள் எழுச்சியால் சரிந்தன. அதேபோல அநீதிகள் தலைவிரித்தாடும்போது கால சக்கரமும் கைகட்டி வேடிக்கை பார்க்காது, அது தனக்கே உரிய பாணியில் வேலையை காட்டிவிடும்.

அந்தவகையில் ராஜபக்சக்களை தலையில் தூக்கி வைத்து ஆனந்த கூத்தாடியவர்கள்கூட , ராஜபக்சக்கள் வீடு செல்ல வேண்டும் என வலியுறுத்தி பொங்கியெழுந்து போராடுகின்றனர். எமது மக்களும் வீதிக்கு இறங்கிவிட்டனர். இதனை நாம் நாட்டை மீட்பதற்கான சுதந்திர போராட்டமாகவே கருதுகின்றோம். எனவே, இன, மத, பேதமின்றி அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து தற்போதுபோலவே தொடர்ந்தும் போராட வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.