Developed by - Tamilosai
ஜனாதிபதியும், பிரதமரும் எள்ளென்றால் நான் எண்ணெய்யாக இருந்து அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பேன் என கடற்தொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக இழுபறியில் இருந்துவரும் ஒலுவில் துறைமுக விவகாரம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று புதன்கிழமை ஒலுவில் துறைமுக வளாகத்தை பார்வையிட்டதுடன், துறைமுக குளிர்சாதன வசதிகள் மேம்பாடு, மீன் சந்தைப்படுத்தல் வசதிகள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர்: ஜனாதிபதி, பிரதமர் எள்ளென்றால் நான் எண்ணெய்யாக இருந்து அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பேன்.
கடந்த காலங்களில் இந்த அரசாங்கத்தின் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகளை என்னால் முடிந்தவரை நிறைவேற்றத் தயாராகவுள்ளேன்.
இந்த ஒலுவில் துறைமுக விவகாரம் தொடர்பில் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா எம்.பியும் கரிசனைகொண்டு என்னிடமும், ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்தவுடனும் பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.
மீனவர்கள் இன்று என்னைச் சந்தித்து முன்வைத்த பிரச்சினைகளை நான் கூடிய விரைவில் தீர்த்து வைக்கத் தயாராகவுள்ளேன்.
யாருக்கும் பயப்படத் தேவையில்லை. மீனவர்களுக்குத் தேவையாகவுள்ள ஒலுவில் துறைமுகம் யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் பிரச்சினைகள் முடிக்கப்பட்டு விரைவில் திறக்கப்படும்- என்றார்.