தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சைவப்புலவர் செல்லத்துரை காலமானார்

0 345

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வரலாற்றில், அதன் செயற்பாடுகளில் அர்ப்பணிப்பானதொரு வழிகாட்டியாக, நல்லதொரு ஆலோசகராகத் திகழ்ந்த பெருமகனாரை நாம் இன்று இழந்து நிற்கின்றோம்.

அமரர் சைவப்புலவர், கலாபூஷணம் சு.செல்லத்துரை ஐயா அவர்களின் இழப்பு, சைவத் தமிழர்களின் கலையுலகம் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பு.

இந்த உலகில், வாக்கும் வாழ்வும் ஒருங்கே கூடிச் சிறப்பான வாழ்வு வாழ்வோர்  பலருளர். அவர்களுள் ஒருவராய் வைத்தெண்ணிப் போற்றத்தக்க பெருந்தகையாளனாய் வாழ்ந்தவர் அமரர் சைவப்புலவர் கலாபூஷணம் சு.செல்லத்துரை ஐயா அவர்கள். 

ஈழத்திரு நாட்டில், சைவப் புலவர் என்றவுடன் எல்லோரும் சொல்லிய நாமம் இவர் பெயரென்பது இவர் வாழ்ந்த வாழ்விற்குக் கிடைத்த பெருமை. 

“ஈழத்து நவீன நாடக உலகு, இந்த அரங்கியற் கலைஞருக்கு என்றும் கடமைப்பட்டுள்ளது” என்று கூறும் அளவிற்கு, அறுபதுகளில் அரங்கக் கலை வளர்த்த பெருங்கலைஞன்.

வலிகாமம் வடக்கின் அவைக்காற்றுக் கலையின் உந்து சக்தி இவரே! என யாவரும் ஏற்று நிற்பர். 1969 இல் ஈழத்துச் சிதம்பரத்தின் நிர்வாக நிதிக்காக நாடகம் அரங்கேற்றி இறைபணி செய்த இறை அன்பர்.

யாழ்ப்பாணம், இளவாலை மெய்கண்டான் வித்தியாலயத்தின் மாணவனாகத் திகழ்ந்த இவர், அதே பாடசாலையின் அதிபருமாகிப் பாடசாலைக்குப் பெருமை சேர்த்த பண்பாளன்.

சைவப் புலவரும் நல்லாசானும் நாடக வல்லாளருமாகிய கலாபூஷணம் சு. செல்லத்துரை ஐயா அவர்கள், சமய நாடகம், நாட்டிய நாடகம், இசை நாடகம், கூத்து, பஜனை, வில்லுப்பாட்டு என அத்தனை கலையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர்.

 கலாபூஷணம், சைவப்புலவர் சு.செல்லத்துரை அவர்களின் முத்தான படைப்புகளாக திருமந்திர விருந்து, நற்சிந்தனைகள், வாக்கும் வாழ்வும் : வானொலி உரைத் தொகுப்பு, அரங்கப்படையல்கள் – தமிழ் நாடகங்கள், கோமாதா, வள்ளல் ஏழூர், வில்லிசைப் பாடல்கள் முதலானவை இன்றும் நின்று நிலைப்பவை. 

சைவப்புலவர் சங்க உபதலைவராக,  சைவப்புலவர் சங்கத்தின் செயலாளராக, தேர்வுச் செயலாளராக அரும்பணி ஆற்றி, சைவ சித்தாந்தப் புலவர்கள் பலரை உருவாக்கிய பெருமைக்குரியவர்.

 திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்தப் பயிற்சி மையம், திருமந்திரப் பணி மன்றம், தெல்லிப்பழை, கலை, இலக்கியக் கழகம், சுகவாழ்வுப் பேரவை ஆகியவற்றின் வரலாற்றினை இவரது பெயரை நீக்கி எழுதிவிட முடியாது என்னும் அளவிற்கு இவரது பணி மகத்தானது.

ஆண்டுதோறும் அமரத்துவமடைந்த  தன் மனைவியின் பெயரால் அரிய பல நூல்களை வெளியிட்ட பெருமகன், திருமூலரின் திருமந்திரத்தில் ஆராக்காதலும் புலமையும் கொண்டிருந்த அன்னார் இறைபதம் அடைந்ததுவும் திருமூலரின் குருபூசை நன்னாளிலே

என்பது இறை அநுக்கிரகம் பெற்ற அழைப்பு என்றே எண்ண வைக்கிறது.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா எம்பெருமானின் பாதார விந்தங்களில் சாந்நித்தியமாக வேண்டிப் பணிகின்றோம்.

அ.உமாமகேஸ்வரன்,

பணிப்பாளர்,

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்.

Leave A Reply

Your email address will not be published.