Developed by - Tamilosai
சூடானில் ஜனநாயக ஆதரவு போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு மற்றும் கண்ணீர்ப் புகைக்குண்டு தாக்குதலை நடத்தியதில் மூவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு வாரத்தில் மட்டும் இடம்பெற்ற மோதலில் 10 இற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் பாதுகாப்புத் தரப்பினரால் கொல்லப்பட்டனர் என்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் அப்துல்லாவை மீண்டும் பதவியில் அமர்த்தக் கோரி, தலைநகர் கார்ட்டூம் மற்றும் பிற நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் போராட்டக்காரர்கள் மீது நேரடித் துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளபோதும் இதில் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளதாக மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
ஜனநாயக சார்பு கூட்டணி தலைமையிலான அரசாங்கத்தை கலைத்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ள இராணுவம் உள்நாட்டுப் போரை தவிர்ப்பதற்கும் அரசியல் உட்பூசல்களைக் கட்டுப்படுத்தவும் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்துள்ளது.
இந்நிலையில் இராணுவத்தின் குறித்த ஆட்சிக்கலைப்பு நடவடிக்கைக்கு சர்வதேச அளவில் பரவலான கண்டனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.