Developed by - Tamilosai
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 26 பேர் உயிரிழந்ததுடன், 2 இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக 17 மாவட்டங்களில் உள்ள, 150 பிரதேச செயலகப் பிரிவுகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, பதுளை, நுவரெலியா, மாத்தளை, கம்பஹா, கொழும்பு, மன்னார், இரத்தினபுரி, களுத்துறை, புத்தளம், அநுராதபுரம், யாழ்ப்பாணம், காலி, கேகாலை, குருநாகல், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களே பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த மாவட்டங்களிலுள்ள 65 ஆயிரத்து 580 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 30 ஆயிரத்து 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குறித்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் இயற்கை அனர்த்தங்களில் சிக்கி இதுவரையில் 26 பேர் உயிரிழந்தனர்.
அவர்களில், புத்தளம் மாவட்டத்தில் 7 பேரும் கேகாலை, குருநாகல் மாவட்டங்களில் தலா 6 பேரும் பதுளை மாவட்டத்தில் நால்வரும் மாத்தளை, காலி, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொருவரும் உயிரிழந்தனர். மேலும் அனர்த்தங்கள் காரணமாக 7 பேர் படுகாயமடைந்தனர்.
இதேநேரம், 23 வீடுகள் முழுமையாகவும், ஆயிரத்து 253 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.