தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சீரற்ற காலநிலையால் 28 ஆயிரம் பேர் பாதிப்பு : 15 பேர் உயிரிழப்பு

0 124

நாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி முதல் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வரை 15 பேர் உயிரிழந்ததோடு, 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நேற்றுக் கேகாலை – ரம்புக்கனை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததோடு, நேற்று முன்தினம் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி இளம் தாதியொருவரும் உயிரிழந்தார்.

சீரற்ற காலநிலை காரணமாக பதுளை, நுவரெலியா, மாத்தளை, கண்டி, முல்லைத்தீவு, கொழும்பு, திருகோணமலை, மன்னார், இரத்தினபுரி, களுத்துறை, புத்தளம், அநுராதபுரம், யாழ்ப்பாணம், காலி, கேகாலை, குருநாகல் மற்றும் கிளிநொச்சி ஆகிய 17 மாவட்டங்களிலும் 7,529 குடும்பங்களைச் சேர்ந்த 28 ஆயிரத்து 263 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இம் மாவட்டங்களில் 13 வீடுகள் முழுமையாகவும், 802 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட 113 குடும்பங்களைச் சேர்ந்த 445 பேர் 13 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு 357 குடும்பங்களைச் சேர்ந்த 1243 பேர் பாதுகாப்பு கருதி உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரம்புக்கனை – தொம்பேமட வீதியில், தம்புள்ளை – வேகட பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றுக்கருகில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி மூவர் உயிரிழந்ததோடு ஒருவர் காயமடைந்துள்ளார். 

அனர்த்தம் இடம்பெற்ற போது வீட்டில் நால்வர் இருந்தனர். குறித்த நால்வரும் இராணுவத்தினரால் மீட்கப்பட்டு ரம்புக்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

குறித்த வீட்டிலிருந்த 35 வயதுடைய தாய், 8 வயதுடைய அவரது மகள் மற்றும் அவர்களின் உறவினரின் 13 வயதுடைய பிரிதொரு சிறுமி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தனர். 

இதன் போது காயமடைந்த 46 வயதுடைய தந்தை ரம்புக்களை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, குருநாகல் – அலவ்வ பொலிஸ் பிரிவில் நாரம்மல – வென்தொருவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில்  திங்கட்கிழமை இரவு மண்மேடு சரிந்து விழுந்ததில் யுவதியொருவர் உயிரிழந்தார். அனர்த்தம் இடம்பெற்ற போது குறித்த வீட்டில் தாய், மகள் மற்றும் மகன் ஆகிய மூவரும் இருந்தனர்.

இதன் போது காயமடைந்த நிலையில் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் 23 வயதுடைய வென்தொருவ பிரதேசத்தைச் சேர்ந்த கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் தாதியாக பணியாற்றுபவர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 29 ஆம் திகதி பதுளையில் எல்ல மற்றும் பசறை ஆகிய பகுதிகளில் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஒக்டோபர் 30 ஆம் திகதி மாத்தளையில் நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததோடு, முல்லைத்தீவு மற்றும் புத்தளத்தில் இருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். நேற்றைய தினம் குருநாகல் – பொல்கஹாவெல பகுதியில் நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

புத்தளம் மாவட்டத்தில் – முந்தலம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மதுரங்குளி கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள 25 வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது.

கொழும்பு – கொலன்னாவை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொதொட்டுவ நகரத்திலுள்ள வீடொன்றின் மீது மரம் முறிந்து விழுந்துள்ளது. கொழும்பு – கோட்டை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் புத்கமுவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் 42 வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது.

கேகாலை – அரநாயக்க பிரதேச செயலகத்தில் வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்து அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இம்மாவட்டத்தில் ரம்புக்கனை பிரதேசத்தில் மரம் முறிந்து விழுந்ததில் ரம்புக்கனை – மாவனெல்ல வீதியூடான போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

நுவரெலியாவில் நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் மண் மேடு சரிந்து விழுந்தமையால் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருந்தது. குருணாகல் மாவட்டத்தின் பொல்கஹாவெல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பல தாழ் நிலப்பிரதேசங்கள் மஹா ஓயா பெருக்கெடுத்தமையால் நீரில் மூழ்கியுள்ளன.

மண்சரிவு, அதிக மழை உள்ளிட்ட அபாயம் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 29 பேரும், களுத்துறை – அகலவத்தை பிரதேசத்தில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேரும்,  வலல்லாவிட்ட பிரதேசத்தில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேரும், மத்துகம பிரதேசத்தில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேரும், பண்டாரகம பிரதேசத்தில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று பதுளை – எல்ல பிரதேசத்தில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 42 பேரும், பதுளை – பசறை பிரதேசத்தில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 78 பேரும், காலியில் 22 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேரும், மன்னாரில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 105 பேரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை

பதுளையில் பசறை, எல்ல ஆகிய பிரதேசங்களுக்கும், கொழும்பில் சீதாவாக்கை, பாணந்துரை ஆகிய பிரதேசங்களுக்கும், களுத்துறையில் இங்கிரிய, வலல்லாவிட்ட, தொடங்கொட, ஹொரணை, மத்துகம, அகலவத்தை, புளத்சிங்கள, பாலிந்தநுவர ஆகிய பிரதேசங்களுக்கும், காலியில் நாகொட, நெலுவ, யக்கலமுல்ல, அக்மீமண, பத்தேகம, எல்பிட்டிய ஆகிய பிரதேசங்களுக்கும், கேகாலையில் ருவன்வெல்ல, யட்டியாந்தோட்டை, கலிகமுவ, தெரணியகல, வரகாப்பொல, மாவனெல்ல, அரநாயக்க, புளத்கொஹூபிட்டி, தெஹியோவிட்ட, ரம்புக்கனை, கேகாலை ஆகிய பிரதேசங்களுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ள எச்சரிக்கை

கம்பஹா மாவட்டத்தில் அத்தனகல்ல, கம்பஹா மற்றும் ஜாஎல ஆகிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள தாழ் நிலப்பகுதிகளிலும் , களுத்துறை மாவட்டத்தில் புளத்சிங்கள, பதுரலிய, பாலிந்தநுவர, மில்லனிய, ஹொரணை, தொடங்கொட மற்றும் களுத்துறை ஆகிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள தாழ் நிலப்பகுதிகளிலும் வெள்ளம் ஏற்படக் கூடும்.

இதே போன்று கேகாலை, கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் களனி கங்கை பெருக்கெடுக்குமாயின் தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவாக்கை, தொம்பே, கடுவலை, பியகம, கொலன்னாவை, கொழும்பு மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள தாழ் நிலப்பகுதிகளிலும் வெள்ளம் ஏற்படக் கூடும்.

கம்பஹா மற்றும் குருணாகல் மாவட்டங்களில் மஹா ஓயா பெருக்கெடுக்குமாயின் கிரிஉல்ல, அலவ்வ, மீரிகம, பன்னல, வென்னபுவ, நீர்கொழும்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள தாழ் நிலப்பகுதிகளிலும் வெள்ளம் ஏற்படக் கூடும். குருணாகல் , புத்தளம் , இரத்தினபுரி , புளத்சிங்கள மற்றும் காலி ஆகிய பிரதேசங்களில் வெள்ளம் அனர்த்தத்தைக் கருத்திற் கொண்டு மீட்பு பணிகளுக்காக கடற்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

நதிகளின் நீர்மட்டம்

தொடர்ச்சியாக அதிக மழை பெய்யும் பட்சத்தில் களனி கங்கை, களு கங்கை, கின் கங்கை, நில்வளா கங்கை, மஹா ஓயா, அத்தனகளு ஓயா மற்றும் மகாவலி கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் உயர்வடைவதோடு , வெள்ளம் ஏற்படக் கூடும் என்று நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

12 நீர்தேக்கங்களில் 32 வான் கதவுகள் திறப்பு

இராஜாங்கனை நீர் தேக்கத்தின் 10 வான்கதவுகளும் , தெதுருஓயா நீர் தேக்கத்தின் 4 வான்கதவுகளும் , லக்ஷபான நீர் தேக்கத்தின் ஒரு வான்கதவும் , குகுலே கங்கை நீர் தேக்கத்தின் 2 வான்கதவுகளும் , தப்போவ நீர் தேக்கத்தின் 4 வான்கதவுகளும் , பொல்கொல்ல நீர் தேக்கத்தின் 4 வான்கதவுகளும் , கொத்மலை நீர் தேக்கத்தின் 3 வான்கதவுகளும் , விக்டோரியா நீர் தேக்கத்தின் 4 வான்கதவுகளும் , நோட்டன் பிரிட்ஜ் நீர் தேக்கத்தின் ஒரு வான்கதவும் , அங்கமுவ நீர் தேக்கத்தின் 2 வான்கதவுகளும் , துருவில நீர் தேக்கத்தின் ஒரு  வான்கதவும் திறக்கப்பட்டுள்ளன.

அநுராதபுரத்தில் 300 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி

நேற்று செவ்வாய்கிழமை முற்பகல் வரை அநுராதபுரத்திலேயே அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
இம்மாவட்டத்தில் நொச்சியாகம பிரதேசத்தில் 300.4 மில்லி மீற்றர் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதே போன்று மிஹிந்தலை பிரதேசத்தில் 216 மி.மீ, வேவந்தலாவ பிரதேசத்தில் 210.5 மி.மீ, யாழ்ப்பாணத்தில் 203 மி.மீ, தப்போவ பிரதேசத்தில் 200 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மேலும் குருணாகல் – வாரியப்பொல பிரதேசத்தில் 191 மி.மீ, கிரிஉல்ல பிரதேசத்தில் 119 மி.மீ, பொல்கஹாவெல பிரதேசத்தில் 151 மி.மீ, தம்பதெனிய பிரதேசத்தில் 121 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

கேகாலை – ரம்புக்கனையில் 115 மி.மீ, கொடவெவையில் 185 மி.மீ, தீவெலையில் 161 மி.மீ, கேகாலையில் 141 மி.மீ, அலவ்வ 146 மி.மீ என மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதே போன்று மொனராகலை நக்கல பிரதேசத்தில் 134 மி.மீ , களுத்துறை – மத்துகம பிரதேசத்தில் 103 மி.மீ என மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

வானிலை

வங்காள விரிகுடாவின் தென் கிழக்கு பகுதியில் குறைந்த தாழமுக்க பிரதேசம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் இலங்கையின் வடக்கு கடற்கரை வழியாக தமிழகம் நோக்கி நகரும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இதனால் கடற்பிரதேசங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்தோடு வடக்கு, மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும் அநுராதபுரம் , திருகோணமலை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும். அத்தோடு மாத்தளை, பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.