தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சீரற்ற காலநிலையால் மக்கள் பாதிப்பு

0 93

 மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்களின் நாளாந்த நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா, இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை முதலாம் பிரிவு பகுதியில் வெள்ளம் புகுந்ததை அடுத்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் 7 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 வீடுகளின் கூரைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளின் தளபாடங்கள் மற்றும் பொருட்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, பாதிக்கப்பட்டவர்களை தோட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள் பார்வையிட்டுள்ளதோடு,  கிராமசேவகர் ஊடாக இராகலை பொலிஸார் மற்றும் மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலையம், தேசிய கட்டட ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பாதுகாப்புக் கருதி தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை நுவரெலியா பிரதேச சபையின் ஊடாக மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார்.

அத்தோடு, இந்தப் பகுதியில் தொடர்ச்சியாக இவ்வாறான நிலைமையே காணப்படுவதாகவும் குடியிருப்பாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனவே, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என குடியிருப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.