தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எதிராக  உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு

0 210

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்குவுக்கு எதிராக  உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இரத்தினபுரி – கிரி எல்ல வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது அண்மையில்,  இந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தாக்குதல் மற்றும் பாலியல் சித்திரவதைக்கு உள்ளானதாக கூறப்பட்ட இளைஞரால்  இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தாக்குதல் மற்றும் சித்திரவதைகளுக்கு முகம் கொடுத்ததாக கூறப்படும் மிஷார ரணசிங்க என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

நீலகண்டன் & நீலகண்டன் சட்ட நிறுவனம் ஊடாக தாக்கல் செய்துள்ள இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில்,  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு, கிரி எல்ல பகுதியில் பொலிஸ் பொறுப்பதிகாரி திஸாநாயக்க, அயகம பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி இந்திக மிலான், பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

தாக்குதல் மற்றும் சித்திரவதை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு பொலிஸ் திணைக்களத்தின் பதவிகளை வகிக்க தகுதியற்றவர் என உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவூடாக மனுதாரர் கோரியுள்ளார்.

அத்துடன் அவருக்கு மன நல பரிசோதனையினை முன்னெடுத்து அதன் சான்றிதழை உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் எனவும்,  1 முதல் 3 வரையிலான பிரதிவாதிகளுக்கு எதிராக  தண்டனைச் சட்டக் கோவை மற்றும் சித்திரவதைகள் தொடர்பிலான சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸ் மா அதிபருக்கும் சட்ட மா அதிபருக்கும் உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கோரியுள்ளார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு உள்ளிட்ட  இருவர், இளைஞர் ஒருவரை சுற்றி இருந்து  தாக்கும் வண்ணமான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத் தளங்களில் பரவிய நிலையில் அதனை மையப்படுத்தி  பொலிஸ் தலைமையகத்தின் விஷேட விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது. 

அதன்படி   சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பிரதிப்  பொலிஸ் மா அதிபராக இருந்த ரன்மல் கொடித்துவக்கு,  அங்கிருந்து இடமாற்றப்பட்டு பொலிஸ் வைத்திய மற்றும் நலன்புரி பிரிவுக்கு நியமிக்கப்பட்டார்.

இரத்தினபுரி – கிரி எல்ல வீதியில் இந்த  தாக்குதல் சம்பவம் கடந்த ஒக்டோபர்  25 ஆம் திகதி பதிவாகியுள்ளது.  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் பயணித்த ஜீப் வண்டியை இரத்தினபுரி – கிரியல்ல வீதியில், பின்னால் வந்த கார் ஒன்று முந்திச் செல்ல முற்பட்டமையால்  குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

இதன்போது, காரில் பயணித்ததாக கூறப்படும் இளைஞனுக்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, பொலிஸ் ஜீப் வண்டியின் பின் பக்கமாக உள்ள பகுதியில் வைத்து கடுமையாக தாக்குவது குறித்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

அபாயகரமாக வாகனம் செலுத்தியதாக குறித்த சாரதியை கழுத்தினால் பிடித்து பொலிஸ் ஜீப் வண்டியை நோக்கி இழுத்து வந்து தாக்குவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும் அதன் பின்னர்,  அவ்விளைஞன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிரி எல்ல பொலிஸ் நிலைய அறையொன்றில் அவர் நிர்வாணப்படுத்தப்பட்டு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரால் சித்திரவதைச் செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டு விசாரணைகள் கோரப்பட்டுள்ளன. 

இந்நிலையிலேயே தற்போது உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவும்  பாதிக்கப்பட்ட இளைஞரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பின் 11,12(1),13(1)(2), 14 (1)(ஏ) ஆகிய உறுப்புரைகள் ஊடாக வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு கோரியே இந்த மனு தாக்கல்ச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.