தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சவேந்திர சில்வாவிற்கு எதிராகப் பயணத்தடை விதிக்காததன் காரணம் என்ன? – கெரெத் தோமஸ்

0 254

இலங்கையில் இறுதிக்கட்டப்போரின்போது இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல்கள்  தொடர்பில் நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக அழுத்தத்தைப் பிரயோகித்துவருகின்ற போதிலும், சம்பந்தப்பட்டவர்களைப் பொறுப்புக்கூறச்செய்வதற்கு இலங்கை அரசாங்கம் எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதியாக செயற்பட்ட சவேந்திர சில்வாவிற்கு எதிராக பிரிட்டன் பயணத்தடை விதிக்காமலிருப்பதன் காரணம் என்ன? என்று அந்நாட்டுப்பாராளுமன்ற உறுப்பினர் கெரெத் தோமஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

போர்க்குற்றங்களுடன் தொடர்புபட்டிருப்பதாக நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டிருக்கும் இலங்கையில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராகத் தடைவிதிக்குமாறு பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்களான சாரா ஜோன்ஸ், எலியற் கொல்பேர்ன், தெரேஸா வில்லியர்ஸ், சியோபெய்ன் மெக்டொனாக், ஸ்டீவ் பேக்கர் உள்ளிட்டோர் ஏற்கனவே வலியுறுத்தியுள்ள நிலையில், தற்போது பாராளுமன்ற உறுப்பினர் கெரெத் தோமஸும் பிரிட்டன் பாராளுமன்றத்தில் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். 

அவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் இவ்விடயம் தொடர்பில் மேலும் கூறியதாவது,

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட போரின்போது சட்டவிரோத படுகொலைகள், மிகமோசமான சித்திரவதைகள், வைத்தியசாலைகள் உள்ளடங்கலாக பொதுமக்கள் தங்கியிருந்த பகுதிகளை இலக்குவைத்து நடாத்தப்பட்ட தாக்குதல்கள், பொஸ்பரஸ் குண்டுகள் போன்ற சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களின் பயன்பாடு உள்ளடங்கலாகப் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமைக்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் கடந்த 12 வருடகாலத்தில் திரட்டப்பட்டுள்ள என்பதை இவ்விடயம் குறித்து அவதானம் செலுத்திக்கொண்டிருப்பவர்கள் நன்கறிவார்கள்.

இக்குற்றங்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக அழுத்தத்தைப் பிரயோகித்துவருகின்ற போதிலும், சம்பந்தப்பட்டவர்களைப் பொறுப்புக்கூறச்செய்வதற்கு இலங்கை அரசாங்கம் எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.

எதுஎவ்வாறெனினும் சில தனிநபர்களும் அரச சார்பற்ற அமைப்புக்களும் இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விரிவான ஆதாரங்களைத் திரட்டி, அவற்றை ஆவணப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் சவேந்திர சில்வா தொடர்புபட்டிருக்கக்கூடிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய 50 பக்க ஆவணமொன்று இவ்வருடம் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டது. 

சவேந்திர சில்வா இறுதிக்கட்டப்போரில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரவில் கட்டளைத்தளபதியாகப் பணியாற்றியுள்ளார்.

இலங்கையின் 58 ஆவது படைப்பிரிவினால் நிகழ்த்தப்பட்ட மிகமோசமான மனித உரிமை மீறல்கள், சட்டவிரோத படுகொலைகளுக்கான கட்டளைகளைப் பிறப்பித்தமைக்காகப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டியவராக சவேந்திர சில்வாவை அடையாளங்கண்டுள்ள அமெரிக்கா, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராகப் பயணத்தடை விதித்துள்ளது. 

அவ்வாறிருக்கையில் எமது நாடு சவேந்திர சில்வாவிற்கு எதிராக ஏன் இ;ன்னமும் பயணத்தடை விதிக்கவில்லை? அவருக்கெதிராகப் பயணத்தடை விதிப்பது மாத்திரமன்றி, அவரது சொத்துக்களும் முடக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

Leave A Reply

Your email address will not be published.