Developed by - Tamilosai
இலங்கையில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்த சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் எங்களிடம் உறுதி
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் கிஆனி இன்பென்டினோ (Gianni Infantino),
அநுராதபுரத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து,
நேற்று பிற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களையும் என்னையும் சந்தித்தார்.
கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நேற்று நடைபெறுகின்ற “பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ கிண்ணம்” கால்பந்து இறுதிப் போட்டியில் பிரதம அதிதியாகப் பங்கேற்பதற்காக கிஆனி இன்பென்டினோ இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.
உலக கால்பந்து சம்மேளனமானது, இலங்கை கால்பந்து விளையாட்டைப் பிரபல்யப்படுத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என கிஆனி இன்பென்டினோ என்னிடம் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில் கால்பந்து விளையாட்டைப் பிரபல்யப்படுத்துவதன் மூலம் நல்லொழுக்கம், குழு உணர்வு மற்றும் ஒழுக்க நெறியைக் கட்டியெழுப்ப முடியுமென்பதைத் தலைவர் சுட்டிக்காட்டினார்.
கால்பந்து விளையாட்டானது, குறைந்த வசதிகளே தேவையான ஒரு விளையாட்டாகும்.
அதனால், கிராமிய ரீதியில் மிகவும் இலகுவாக அதனைப் பிரபல்யப்படுத்த முடியும்.
அதற்காக தமது சம்மேளனம் ஒத்துழைப்பு வழங்கும் எனவும், கொழும்பு அல்லது அதனை அண்டிய பிரதேசத்தில் முழுமையான வசதிகளைக் கொண்ட கால்பந்து விளையாட்டு அரங்கு ஒன்றை நிர்மாணிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவார் எனவும் கிஆனி இன்பென்டினோ தெரிவித்தார்.
இலங்கையானது, கடந்த காலங்களில் சர்வதேச மட்டத்திலான பல கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற்றதைப் பாராட்டிய உலக கால்பந்து சம்மேளனத்தின் தலைவர்,
விளையாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ அவர்கள் எடுக்கும் முயற்சிகளையும் பாராட்டினார்.
உலக கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக இந்த நாட்டுக்கு வருகை தந்தது பற்றி பிரதமர் அவர்களும் நானும் கிஆனி அவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவித்தோம்.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, எனது சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோருடன் கிஆனி அவர்களோடு வருகை தந்திருந்த பிரதிநிதிகள் பலரும் நேற்றைய கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.