தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சம்பள அதிகரிப்பிற்காகப் போராடுவதில் தவறென்ன?

0 123

வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் ஆசிரியர்கள் – அதிபர்கள் சம்பள அதிகரிப்பிற்காகப் போராடுவதில் தவறென்ன உள்ளது. தொழிற்சங்க நடவடிக்கைகளுடன் பாடசாலைக்குச் சமுகமளித்து சட்டப்படி கடமையில் ஈடுபடுகிறோம்.


ஆசிரியர் – அதிபர் சேவையில் 24 வருடகாலமாக நிலவும் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கம் அரசாங்கத்திற்குக் கிடையாது.


பாடசாலைகளைத் தொடர்ந்தும் திறப்பதா? அல்லது மூடுவதா? என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும் என ஆசிரியர் – அதிபர் சேவைச் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்  – அதிபர் தொழிற்சங்கத்தினர் சம்பளப் பிரச்சினைக் கோரிக்கையை முன்வைத்து இன்று கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கத்தினர் வீதிக்கிறங்கிப் போராடுவதன் பொறுப்பை அரசாங்கமும், கல்வி சேவை அதிகாரிகளும் ஏற்க வேண்டும்.

முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்காமல் பாடசாலைகளை முதற்கட்டமாகத் திறக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் வலியுறுத்தினோம்.

அரசாங்கம் பலவந்தமான முறையில் பாடசாலைகளைத் திறந்தது. கடந்த 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கத்தினரும், மாணவர்களும் பாடசாலைகளுக்குச் சமுகமளிக்கவில்லை.

எமது போராட்டம் 98 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. அரசாங்கத்தின் உத்தரவிற்கு அமைய ஆசிரியர்கள் கடமைக்குச் சமுகமளிக்கவில்லை.

தொழிற்சங்கத்தினரது ஆலோசனைகளுக்கும், மாணவர்களின் நலனையும் கருத்திற்கொண்டு பாடசாலைகளுக்குச் சமுகமளித்துள்ளோம்.

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கத்தினரது போராட்டத்தை முடிவிற்குக் கொண்டு வரும் நோக்கம் அரசாங்கத்திற்குக் கிடையாது. நிதியமைச்சர், ஜனாதிபதி ஆகியோர் தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட அனுமதி வழங்கவில்லை.

அரசாங்கத்தின் சர்வாதிகாரச் செயற்பாடுகளால் அனைத்துச் சேவைத் துறையினரும் வீதிக்கிறங்கியுள்ளனர். தவறான பொருளாதார முகாமைத்துவத்தால் வாழ்க்கைச் செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சுபோதினி குழு அறிக்கையின் பிரகாரம் ஆசிரியர் – அதிபர் சேவையில் நிலவும் சம்பளப் பிரச்சினைகளுக்கு வரவு – செலவுத் திட்டத்திற்கு அமைய தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும். மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு கல்விச் செயற்பாடுகளில் மாத்திரம் ஈடுபடுவோம்.

முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம். தொழிற்சங்கப் போராட்டத்தைக் கைவிடவில்லை. தொழிற்சங்கப் போராட்டத்துடன் சட்டப்படி சேவையில் ஈடுபட்டுள்ளோம்.

பொருளாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்கிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கத்தினரது கோரிக்கைகளுக்குத் தீர்வு காண எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

எனவே, போராட்டத்தின் ஊடாகத் தீர்வைப் பெற்றுக்கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.