Developed by - Tamilosai
தொழில் அமைச்சர் என்ற வகையில் தாமே பெருந்தோட்ட மக்களுக்கு 1,000 ரூபா சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொடுத்ததாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று (30-10-2021) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்;
´ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, நாட்டை ஆட்சி செய்த பலமான ஒரு கட்சியாகும்.
எனினும் இப்போது சிறிய பின்னடைவைச் சந்தித்துள்ளோம்.
நாம் எமது மத்திய செயற்குழுவின் அனுமதிக்கமையவே கடந்த நல்லாட்சியில் இணைந்து செயற்பட்டோம்.
மாறாகத் தனிப்பட்ட முடிவுக்கமைய செல்லவில்லை. நல்லாட்சியில் ரணிலுக்கும் மைத்திரிக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டன.
அதனால் அது இரண்டாக உடைந்த அரசாங்கமாகக் காணப்பட்டது. ஆகவே, முன்பு இருந்ததை விட எமது கட்சியின் வாக்கு வங்கி குறைந்துள்ளது உண்மை.
அதேபோன்று பொதுஜன பெரமுனவுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டதால் எமக்கு 14 ஆசனங்கள் கிடைத்தன.
விருப்பு வாக்குப் பிரச்சினை அனைத்துக் கட்சிகளிலும் உள்ளது. அதனால்தான் அதை ஒழிக்க வேண்டும் எனக் கூறி வருகின்றோம்.
எமது கட்சி சார்பில் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாமை கட்சி ஆதரவாளர்களிடையே ஒரு சோர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனை நாம் மறைப்பதில்லை.
இதுவே கூட்டணி அரசியலின் சுபாவம். எமது ஆதரவாளர்களையும் கட்சியையும் வென்றால் மாத்திரமே குறுகிய காலத்தில் சுதந்திரக் கட்சி தீர்க்கமானமிக்கதாய்´ மாறும்.
ஆகவே எமது கொள்ளைகளையும், வேலைத் திட்டங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.
இதற்காகப் பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் விவாதித்துக் கொண்டிருந்தால் எம்மால் இலக்கை அடைய முடியாது.
கோல் மூட்டுவதே தற்போதைய அரசியல். அந்த முறையில் நாம் அரசியல் செய்யத் தேவையில்லை.
சுதந்திரக்கட்சி எப்போதும் இனவாதம் பார்த்ததில்லை. பார்க்கப் போவதும் இல்லை.
பெருந்தோட்ட மக்களுக்கு 1,000 ரூபா சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொடுத்தது நாமே.
எதிர்காலத்தில் தேசிய கொள்கை ஒன்றை வகுத்து செயற்படுவது அவசியம். எவரும் வரலாம் நாம் ஒருவரையும் வெட்டுவதில்லை. ஒவ்வொருவரும் பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்´என அவர் மேலும் தெரிவித்தார்.