Developed by - Tamilosai
அரச தலைவர் மாளிகையில் நேற்றுமுன்தினம் 8ம் திகதி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பாக லந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பொதுப் போக்குவரத்து சேவைகளை வினைத்திறன் மற்றும் தரம் வாய்ந்ததாக பேண வேண்டியதன் அவசியத்தை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இந்த சந்திப்பில் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
கோட்டாபய முன்வைத்த கோரிக்கைகள்
- எரிபொருள் விலை உயர்வால் மக்கள் அவதிப்படுகின்றனர். அதேவேளை, பொதுப் போக்குவரத்திற்கு அதிக தேவை காணப்படுவதாகவும், அதனை இலகுபடுத்துவதன் மூலம் மக்கள் நிம்மதியடைவார்கள் எனவும் அரச தலைவர் தெரிவித்தார்.
- தொடருந்து மற்றும் பேருந்துகளுக்கு முறையான எரிபொருள் விநியோகத்தின் அவசியம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
- போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கான எரிபொருளை இரவு வேளைகளில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
- பார்க் & டிரைவ் அமைப்பை விரிவுபடுத்தவும், தரிப்பிட கட்டணத்தை குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- தெரிவு செய்யப்பட்ட தொடருந்து நிலையங்களுக்கு அருகாமையில் வாகனத் தரிப்பிட வசதிகளை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட வேண்டுமெனவும் அரச தலைவர் தெரிவித்தார்.
- தற்போது போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கான ஒருங்கிணைந்த அட்டவணை முறையை குறுகிய சேவைகளுக்கு பயன்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- அலுவலக சேவைகளை இலக்காகக் கொண்டு புதிய தொடருந்து சேவைகளை தொடங்கவும் தற்போது இயக்கப்படும் தொடருந்துந்துகளுக்கான பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
- இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண இணக்கம் காணப்பட்டதுடன், அதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் சமர்ப்பிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
- தொடருந்து திணைக்களத்துக்கு சொந்தமான ஒதுக்கப்பட்ட நிலங்களை ஓராண்டுக்கு உணவுப் பயிர்ச் செய்கைகளுக்காக குத்தகைக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது.
- குறித்த காணிகளை மிகக்குறைந்த வரிவிகிதத்தில் விவசாய சங்கங்களுக்கு வழங்க பிரதேச செயலகங்கள் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்