தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கோட்டாபய மக்களைத் துன்பத்திலும் சிரிக்க வைக்கிறார் – மனோ கணேசன் சாடல்

0 181

 விலைவாசி துன்பத்தில் சிக்கி விழி பிதுங்கும் நிலைமையில் நிற்கும் இந்நாட்டு மக்களிடம், ‘அரிசி-பருப்பு, விலைவாசிகளைப் பற்றிப்பேச நான் ஜனாதிபதி பதவிக்குத் தெரிவு செய்யப்படவில்லை’ என்று கூறி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிரிப்புக் காட்டியுள்ளார். 

கி.மு 31ல் பிறந்து, உலகை அளந்த, எங்கள் அய்யன் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சொல்லிச்சென்ற ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்ற வாக்கியத்துக்கு இணங்க நாமும் சிரித்து வைப்போம் எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன்  கூறியுள்ளார்.

அரிசி, பருப்பு, விலைவாசிகளை பற்றி பேச தான் பதவிக்கு வரவில்லை என்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கூற்று பற்றி மனோ எம்.பி மேலும் கூறியுள்ளதாவது;

கொவிட் முதல் அலையின் போது, முதன் முறையாக நாட்டு மக்களை விளித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அன்று உரையாற்றினார். அந்த உரையில் அவர் கூறிய பிரதான விடயம் ஒன்று இருந்தது. அது என்ன?

செமன் மீன் டின், பருப்பு, பால்மா ஆகிய அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பேன். அவற்றை கட்டுப்பாட்டு விலைகள் தொடர்பான வர்த்தமானியை வெளியிடுவேன், என்று தனது உரையில் ஜனாதிபதி கூறினார்.

இதனால் எந்த பயனும் ஏற்படவில்லை என்பது வேறு விடயம். அவரது வர்த்தமானி விலைகளில் சந்தையில் பொருட்களை தேடியலைந்து மக்கள் ஏமாந்து போனதுதான் மிச்சம்.

சீனிக்கு ரூ. 49-75 என்ற மிகப்பெரிய வரி குறைப்பை இந்த ஜனாதிபதி செய்தார். வரி குறைந்தது. இதனால், சுமார் ரூ.1,595 கோடி வருமானத்தை திறைசேரி இழந்தது. ஆகா, அப்படியானால் இந்த பெரும் தொகை, பாமர மக்களுக்கு விலைக் குறைப்பாக கிடைக்கும். 

அதாவது சீனி அரசாங்கம் சொல்லும் குறைந்த விலையில் கிடைக்கும் என நாம் எதிர்பார்த்தோம். கடைசியில், இந்த ரூ.1,595 கோடி திறைசேரிக்கும் போகவில்லை. மக்களுக்கும் கிடைக்கவில்லை. எங்கே போனது? யாருக்கு கிடைத்தது? இதுபற்றி ஜனாதிபதி இதுவரை பதில் கூறவில்லை -என்றார்.

Leave A Reply

Your email address will not be published.