தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கோட்டாபயவின் பொறிக்குள் விழுந்து விடவேண்டாம்-பிரிட்டனிலிருந்து கடிதம்

0 453

கோட்டாபயவின் பொறிக்குள் விழுந்து விடவேண்டாம் என்றும் அவரை அவசரமாக சந்திக்க வேண்டிய தேவையில்லை என்பதால் அழைப்பை மறுபரிசீலனைக்கு உட்படுத்துமாறும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு அவசர கடிதமொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரத்தானியக் கிளை அனுப்பியுள்ளது.

அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டப்பட்ட பொறுப்புக்கூறல் பற்றிய விடயங்களால் நெருக்கடிகளைச் சந்தித்துள்ள இலங்கை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ அதிலிருந்து மீள்வதற்கான பொறியாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திப்பதற்கு அழைத்துள்ளார் என்றும் கிளை சுட்டிக்காட்டியுள்ளது.

அக்கடிதத்தில், இலங்கையின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பேச்சுவார்த்தைக்கு அவசரமாக அழைத்துள்ளது. இந்த அழைப்பு தொடர்பில் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தங்களுக்கு அனுப்பிய கடிதத்தினை தயவு செய்து காழ்ப்புணர்ச்சி இல்லாது ஆழமாகப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இந்தியப் பிரதமர் மோடியின் அழைப்புக்கு இழுத்தடிப்புச் செய்துவிட்டு கோட்டாபயவின் அழைப்புக்கு விழுந்தடித்து ஓடவேண்டுமா? என்று ஒருகணம் சிந்திப்பது நல்லது.

இலங்கை அரச தலைவரின்அழைப்பானது, ஐ.நா.வின் சூட்டைத் தணிக்கவே என்பது குழந்தைப் பிள்ளைக்கும் தெரிந்த விடயம். ஆகவே கோட்டாபயவின் பொறிக்குள் தயவு செய்து அகப்பட்டுவிடாதீர்கள் என புலம்பெயர் தமிழ் மக்கள் சார்பாக குறிப்பிடுகின்றோம்.அத்துடன், கீழ்வரும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது,

அரச தலைவர், முதலில் என்ன விடயங்கள் பற்றி பேச அழைக்கிறார் என்பது தெளிவுபடுத்த வேண்டும்.

கடந்த 2 வருடங்களாக இந்தத் தலைவர் எடுத்துவரும் காணி சுவீகரிப்பு,பௌத்த, சின்னங்கள் வைப்பு யாவும் உடன் நிறுத்தி தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தவேண்டும்.

மரண தண்டனைக் குற்றவாளிகளை விடுதலை செய்த மன்னிப்புக்குணம் கொண்ட இந்த மகான் அரசியல் கைதிகள் அத்தனைபேரையும் விடுதலை செய்யவேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும். பயங்கரவாதச் தடைச் சட்டம் உடன் நீக்கப்பட வேண்டும்.

இந்தியா எமது தீர்வுக்காகக் கோரி நிற்கும் 13ஆவது திருத்தச் சட்ட முழுமையான அமுலாக்கம், காத்திரமான அதிகாரப்பகிர்வும் பற்றி வெளிப்படையான நிலைப்பாடு அறிவிக்கப்படவேண்டும்.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் யாவும் பேச்சுவார்த்தை இல்லாமலேயே செய்யக்கூடியவை. பேச்சுவார்த்தை என்பது காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடு என்பதை விளக்கத் தேவையில்லை.

இவற்றைச் செய்தால் சிங்கள மக்களுக்கு இரத்தக் கொதிப்பு ஏற்படும் என்ற வாதத்தை இனியும் நாம் ஏற்கத் தயாராக இல்லை. தயவு செய்து கூடிய விரைவில் இதுபற்றித் தங்கள் அறிக்கையை எதிர்பார்க்கிறோம். இதுவே ஈழத்தமிழர் பலரதும் எதிர்பார்ப்பாக உள்ளது என அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.