தமிழ் ஓசை
தமிழ் ஓசை

காரைதீவில் முன் மாதிரி அறநெறி நூலகம் அங்குரார்ப்பணம்!

0 232

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அறநெறிப் பாடசாலைகளுக்கான  மாதிரி நூலகம் அமைக்கும் செயற்றிட்டத்தின் கீழ், காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை  முன் மாதிரியான அறநெறி நூலகம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ. உமாமகேஸ்வரனின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட, மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன்  துணைமேலாளர்  ஶ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜீ மஹராஜ் அவர்கள், சுவாமி விபுலானந்தரது உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்தார். 

நிகழ்வின் முக்கிய அம்சமான முன்மாதிரி நூலகமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட “வித்திய கூடம்” எனும் பெயரிலான  முன் மாதிரியான அறநெறி நூலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட நூல்களை விருந்தினர்கள் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டோர் பார்வையிட்டனர். 

இந்நிகழ்விலே, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் பதிப்பிக்கப் பெற்ற “கோளறுப்  பதிகம்” மற்றும் ” விநாயகர் அகவல்”  ஆகிய நூல்களை இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அ. உமாமகேஸ்வரன்,    நிகழ்வின் பிரதம விருந்தினர் சுவாமி நீலமாதவானந்த ஜீ மஹராஜ் அவர்களிற்கு வழங்கி வெளியீடு செய்து வைத்தார். 

இந்நிகழ்விலே அறநெறிப் பாடசாலைகளுக்கான  மாதிரி நூலகம் அமைக்கும் செயற்றிட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு  நூல்கள் வழங்கும் செயற்பாடும் இடம்பெற்றது.

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு இலங்கை வானொலி தென்றல் அலைவரிசையிலே இடம்பெற்றுவரும் அறநெறிச்சாரம் வானொலி நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுக்குப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வும்  இடம்பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.