தமிழ் ஓசை
தமிழ் ஓசை

காணாமல்போனவர்கள் குறித்து ஆராய டக்ளஸ் நியமிக்கப்பட்டதை ஏற்க முடியாது – சாணக்கியன்

0 193

காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை  காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி நியமித்துள்ளமையை ஏற்க முடியாதென மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட சாணக்கியன், “இந்த அரசாங்கமானது பொய்யான ஒரு அரசாங்கம். 

அனைத்து விடயங்களிலும் பொய்யும் ஊழலும் மோசடியும் மக்களுக்குச் சுதந்திரமில்லாத ஒரு மோசமான அரசாங்கத்தின் அமைச்சர்களின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும்.

ஜனாதிபதி தொடக்கம் பிரதமர், அமைச்சர்கள் பொய்களை சொல்லும் நிலைப்பாடே காணப்படுகின்றது. 
வியாபார நோக்குடனும் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தேன்.

 அவற்றில் எதனையும் பூர்த்திசெய்யாமல் சிறிய ஒரு விடயத்தை மட்டும் செய்துவிட்டு அதற்கொரு மாபெரும் திறப்பு விழாவை செய்துவிட்டு சென்றிருந்தார்.

இலங்கையில் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை ஜனாதிபதி நியமித்துள்ளதாக செய்திகளில் பார்க்கக்கூடியதாகவுள்ளது.

 கடந்த காலத்தில் கடத்தல், காணாமல்போதல் சம்பவங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி. குழுவுக்கும் தொடர்பிருப்பதாக பல்வேறு நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை நியமித்தது ஏற்றுக்கொள்ள முடியாது.

இலங்கையிலுள்ள மீனவர்களின் பிரச்சினையைப் பார்க்கமுடியாத அமைச்சர் எவ்வாறு அந்தமானில் உள்ள மீனவர்களைப் பார்க்கப்போகின்றார்.

எந்தவொரு விடயத்திலும் அமைச்சர் டக்ளஸ் மீது நம்பிக்கை வைக்க முடியாது” என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.